தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர்கள் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2022 இன்று சனிக்கிழமை இரண்டாவது நாளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆரம்பநிகழ்வாக கேணல் சங்கர் அவர்களின் நினைவுத்தூபி முன்பாக சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
26.12.2007 அன்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன் அவர்களின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை 02.04.2000 அன்று இத்தாவில் பளைப் பகுதியில் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்த வீரச்சாவடைந்த 2 ஆம் லெப்.காண்டீபன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறித்தே பகுதியில் ஆரம்பமான குறித்த போட்டிகள் இன்று சனிக்கிழமை சார்சல் பகுதியில் அமைந்துள்ள நெல்சன் மண்டேலா விளையாட்டுத் திடலில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.
இன்றைய போட்டிகளாக ஓட்டம், நீளம் பாய்தல், உயரம்பாய்தல், கயிறடித்தல், பந்தெறிதல், முப்பாய்ச்சல், பொருள்சேகரித்தல், நின்றுபாய்தல், தடைதாண்டுதல் போன்ற போட்டிகள் கடும் வெய்யிலுக்கு மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றன.
தமிழர் வி.க. 93, தமிழர் வி.க. 94, தமிழர் வி.க.95, யாழ்டன் வி.க., நல்லூர்ஸ்தான் வி.க., அரியாலை ஐக்கிய கழகம், வட்டுக்கோட்டை வி.க. ஆகிய கழகங்களிடையே விறுவிறுப்பாக போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
தொடர்ந்து நாளை 17.07.2022 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டிகள் சார்சல் நெல்சன் மண்டேலா விளையாட்டுத் திடலில் காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வுகளைக் கண்டுகளிக்க அனவரையும் ஏற்பாட்டாளர்கள் அழைத்து நிற்கின்றனர்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)