இலங்கை போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், குற்றச் செயல்களக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் மனித உரிமை மேம்படுத்தல் ஆகியனவற்றின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அறிக்கையில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தரத்திற்கு அமைய குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் யதார்த்தமான நம்பகமான பொறிமுறைகளை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து இன சமூகங்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஒரே விதமாக கவனிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான உறவுகளைப் பேணுமாறு கோரியுள்ளார்.இவ்வாறான முயற்சிகளின் மூலம் இலங்கையில் அமைதியான, சுபீட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.