ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து தற்போது சிங்கப்பூர் சென்றடைந்துள்ளதாக அந்நாடு உறுதிப்படுத்தியுள்ளது.
சவூதி விமான சேவைக்குச் சொந்தமான SV 788 எனும் விமானம் மூலம் அவர் இன்று பிற்பகல் சிங்கப்பூரை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில், கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்கு வந்துள்ளதாகவும், அவர் தஞ்சக் கோரிக்கை முன்வைத்து தமது நாட்டுக்கு வரவில்லையெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை சிங்கப்பூர் அங்கீகரிப்பதில்லையெனவும் குறித்த அறிவிப்பில் சிங்கப்பூர் வெளி விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (14) மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த SV 788 எனும் சவூதி அரேபிய விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் பயணம் தொடர்பில் www.flightradar24.com இணையத்தளத்தில் பல்லாயிரக் கணக்கானோர் தேடியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
Bloomberg செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியிலிருந்து நேற்றையதினம் விலகுவதாக அறிவித்திருந்த போதிலும், அவரது கடிதம் நேற்றையதினம் (13) கிடைக்கவில்லை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆயினும் குறித்த இராஜினாமா கடிதம் சபாநாயகருக்கு இலங்கையிலுள்ள சிங்கப்பூர் தூதுவராலயம் மூலம் தற்போது கிடைத்துள்ளதாகவும், அதன் சட்டரீதியான தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜனாதிபதியின் இராஜினாமா தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளதாக, சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.