ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரினால் வெளியிடப்பட்ட கலப்பு நீதிமன்ற விசாரணையை நாம் வரவேற்பதுடன் அதில் கூறப்பட்ட விடயங்கள் தெளிவுபடுத்தப்படவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் தமிழக சட்டப்பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையே தேவையென கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நாவில் வெளியிடப்பட்ட அறிக்கை குற்றவியல் அடிப்படையில் விசாரிக்கப்பட்ட அறிக்கை அல்ல என்பதை மனித உரிமை ஆணையாளர் ஆரம்பத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அதை நாம் வரவேற்கின்றோம்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை முழுமையான நம்பகத் தன்மையான நடுநிலைமை வகிக்கக்கூடிய ஒரு சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் இனம் காணப்பட்டு குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குகள் நீதிமன்றம் ஊடாக தாக்கல் செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்படவேண்டும் என்பதுதான் தமிழ் மக்களின் ஆழமான கருத்து.
வெறுமனே அறிக்கையூடாக தமிழ் மக்களின் நீதி தேடுகின்ற தாகத்தை பூர்த்தி செய்யமுடியாது. மனித உரிமை ஆணையாளர் இலங்கை அரசு நடத்துகின்ற உள்ளக விசாரணையை நிராகரித்துள்ளார். இது வரவேற்கத்தக்க விடயம்.
இலங்கை அரசு நடத்துகின்ற உள்ளக விசாரணையை ஏற்றுக் கொள்ளமுடியாது. காரணம் இலங்கை அரசும் அரசின் கட்டமைப்புக்களும் தமிழ் மக்களுக்கு நடத்தப்பட்ட குற்றங்களுக்கு பங்காளிகளாக இருக்கின்ற காரணத்தால் ஆகக் குறைந்த பட்சம் அந்தக் குற்றங்களை மூடி மறைக்கும் வேலைத்திட்டத்தில் செயற்படும் நிலையில் உள்ளது.
உள்ளக விசாரணையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். அதே கருத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும் வலியுறுத்தியுள்ளார்.
இது மட்டுமன்றி இலங்கையுடைய பாதுகாப்புக் கட்டமைப்புக்களும் நீதிக்கான கட்டமைப்புகளும் 30 வருட போராலும் இனப் பிரச்சினையாலும் அதன் நம்பகத் தன்மை, நடுநிலைத் தன்மையும் முற்றுமுழுதாக போயிருப்பதாக தன்னுடைய ஊடக சந்திப்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஏன் என்ன காரணத்திற்காக உள்ளக விசாரணையை மனித உரிமையாளர் அறிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறதோ அதே காரணத்தையே நாங்களும் வலியுறுத்துகின்றோம்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கலப்பு நீதிமன்றம் ஊடாகவும் கலப்பு நீதியரசர்கள் சர்வதேச சட்டத்தரணிகள் ஊடாக குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கை ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.
கலப்பு நீதிமன்றம் கலப்பு நீதிபதிகள் விசாரணை உருவாக்கும் கட்டமைப்பு எந்த வகையில் உள்ளது. கலப்பு நீதிமன்றம் எவ்வாறு உருவாக்கலாம் என்பது தொடர்பில் தெளிவு இல்லை. எங்களைப் பொறுத்தவரை கலப்புக் கட்டமைப்பு தொடர்பாக கூடுதலான தெளிவுபடுத்தலை எதிர்பார்க்கின்றோம். இந்த தெளிவில்லாத தன்மையில் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தொடர்ந்தும் சர்வதேச பொறிமுறையை ஏற்றுக்கொள்ளலாம்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முழுமையாக நம்பக்கூடிய ஒரு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் என்றார்.
Home
ஈழச்செய்திகள் கலப்பு நீதிமன்ற விசாரணை விடயங்கள் தெளிவுபடுத்தப்படவேண்டும்:கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!