பிரான்சில் சிறப்பாக ஆரம்பமான மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டி- 2022

0
503


பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 27 ஆவது வருடமாக நடாத்தும்  மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2022 இன் தெரிவுப்போட்டிகள் பிரான்சு Creteil விளையாட்டுத் திடலில் இன்று (10.07.2022) ஞாயிற்றுக்கிழமை காலை மிகவும் விறுவிறுப்போடு ஆரம்பமாகி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 27.03.1987 அன்று இந்திய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை தனேந்திரன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் அனைத்துப் போட்டியாளர்களையும் வாழ்த்தி வரவேற்று போட்டிகளை ஆரம்பித்துவைத்தார்.
இன்றைய தினம் குண்டு போடுதல், தட்டெறிதல், ஈட்டி எறிதல் ஆகிய விளையாட்டுக்கள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. பிரான்சில் கடும் வெய்யில் காலநிலை இருந்தபோதும் போட்டியாளர்கள் விறுவிறுப்பாகக் கலந்து சிறப்பித்திருந்தனர்.
போட்டி நடத்துநர்களும் தமது கடமையை கருத்தோடு நடாத்தியிருந்ததையும் காணமுடிந்தது.
தமிழர் வி.க. 93, தமிழர் வி.க. 94, தமிழர் வி.க.95, யாழ்டன் வி.க., நல்லூர்ஸ்தான் வி.க., அரியாலை ஐக்கிய கழகம், வட்டுக்கோட்டை வி.க. ஆகிய கழகங்களிடையே விறுவிறுப்பாக போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

போட்டிகளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் தனது அறிவிப்பினூடாக ஒழுங்குபடுத்தியிருந்தார். குறித்த போட்டிகளின் நோக்கத்தினையும், இரண்டு வருட கால இடைவெளியின் பின்னர் இப்போட்டிகள் இடம்பெறுகின்றபோதும் போட்டியாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொள்வதையிட்டு தமது ஆதங்கத்தினையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
தொடர்ந்து எதிர்வரும் 16.07.2022 சனிக்கிழமை தெரிவுப்போட்டி மற்றும் இறுதிப்போட்டிகளும் 17.07.2022 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியும் சார்சல் பகுதியில் அமைந்துள்ள நெல்சன் மண்டேலா விளையாட்டுத் திடலில் (CENTRE SPORTIF NELSON MANDELA Avenue Paul Langevin 95200 SARCELLES.) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த போட்டிகளைக் கண்டுகளிக்க அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் அழைத்து நிற்கின்றனர்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here