தமிழீழ விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்திய அரசு விதித்த தடையை நீக்கக்கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம். பல்லடத்தில் அண்ணாவின் 107 ஆவது பிறந்தநாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு ம.தி.மு.க சார்பில் நேற்று நடைபெற்றது.இங்கு நிறைவேற்றபட்ட தீர்மானங்களில் ஒன்றாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என கோரப்பட்டது.
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 13வது தீர்மானத்தில்,
தமிழீழ விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு, இந்திய அரசு விதித்த தடையை நீக்கக்கோரி 2010 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
2010 ஆம் ஆண்டில் நீதியரசர் விக்ரம்ஜித் சென் தலைமையில் அமைக்கப்பட்ட தீர்ப்பு ஆயத்தில் நடந்த விசாரணையில், புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்கக் கோரி, வாதங்களை முன்வைத்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடித்தது சரிதான் என்று தீர்ப்பு ஆயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை இரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துதடன், தாமே நேரில் சென்று வாதாடினார்.
நீதியரசர் எலிபி தர்மாராவ் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வாதங்கள் முடிவுற்று தீர்ப்பு நிலுவையில் இருந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் அமைக்கப்பட்டு இருந்த தீர்ப்பு ஆயத்தில் 2012, நவம்பர் 3 ஆம் திகதி இறுதி கட்ட விசாரணையில் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வாதாடினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிக்கோளான தமிழ் ஈழம் என்பது தமிழ்நாட்டையும் சேர்த்துத்தான் என்ற காரணத்தினால் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டபோது, விடுதலைப் புலிகள் உருவாக்கிய தமிழீழ நாட்டின் வரைபடம் மற்றும் தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரைகளை மேற்கோள்காட்டி மத்திய அரசின் குற்றச்சாட்டு பொய்யானது என்பதை வைகோ ஆணித்தரமாக வாதாடினார்.
விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டிலோ, இந்தியாவிலோ ஒர் அங்குல நிலத்தைக்கூட இணைக்க முயற்சிக்கவில்லை. அவர்கள் இலங்கையில் உள்ள வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் மட்டுமே தமிழ் ஈழம் என்கிறார்கள். பெரும்பான்மைத் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் அவை. இலங்கையின் மற்ற பகுதிகளைக்கூட அவர்கள் கைப்பற்ற நினைக்கவில்லை என்றும் எடுத்துரைத்தார்.
2009 இல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்த்தப்பட்டுவிட்டது என்று இலங்கை அரசு கூறி வருவதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கும் போது, புலிகள் மீதான தடையை இன்னும் தொடருவது ஏன்?.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தண்டனையை எதிர்த்து லக்சம்பர்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2011 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கில் புலிகளின் சார்பில், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் வாதாடினார். ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை 2014 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது.
விடுதலைப் புலிகள் இயக்கம் தங்கள் தாயகத்தின் விடுதலைக்காவும், ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் நிர்ணய உரிமையை நிலை நாட்டவும் போராடியதேயொழிய அது பயங்கரவாத இயக்கம் அல்ல என்றும், விக்கிபீடியா தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு சிங்கள அரசின் இன ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடிய புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிப்பது நியாயம் அற்றது என்றும் புலிகள் இயக்கத்தின் சார்பில் முன் வைக்கப்பட்டன.
இந்த வழக்கில்2014 அக்டோபர் 15 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் இயக்கதின் மீதான தடையை நீக்கி தீர்ப்பு வழங்கியது.
இதற்கு முன்பு, 2011 ஜூன் 23 இல் நேபிள் நீதிமன்றம் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது. நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹேக் மாவட்ட நீதிமன்றம் 2011, அக்டோபர் 21 இல் விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல என்று தீர்ப்பு வழங்கியது.
எனவே, இந்திய அரசும் புலிகள் இயக்கத்தை விடுதலைப் போராட்ட இயக்கமாக அங்கீகரித்து அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.