கொழும்பில் திரண்ட வரலாறு காணாத மக்கள் வெள்ளம் : தடுப்பு நடவடிக்கை தீவிரம்!

0
197

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வரலாற்றில் என்றும் இல்லாதவகையில் தலைநகர் கொழும்பை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சத்தெம் வீதி பகுதியில் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்க காலி முகத்திடலில் இன்று பெரும் போராட்டம் பல தரப்புக்களின் ஆதரவுடன் இடம்பெறவுள்ள நிலையில், தலைநகர் கொழும்பு ஸ்தம்பித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டத்திற்கு இன்றுடன் 3 மாதங்கள் நிறைவடைகின்றமையை முன்னிட்டும், மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குல்கள் மேற்கொள்ளப்பட்டு இரு மாதங்கள் நிறைவடைந்தும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இன்று சனிக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எவ்வித அரசியல் கட்சிகளினதும் தலையீடு இன்றி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களினால் இன்றைய ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோட்டா – ரணில் அரசாங்கத்தை பதவி விலகச் செய்வோம் என்ற தொனிப்பொருளிலேயே இன்றைய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அரச எதிர்ப்பு போராட்டத்தையடுத்து கொழும்பு கோட்டையின் பல பகுதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஒன்று கூடியுள்ள மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக தமது கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(நன்றி: கொழும்பு ஊடகங்கள்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here