மு.க. ஸ்டாலினுக்கு வ.கௌதமன் நன்றி.
கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சம்பந்தமான குற்றங்களுக்காக தண்டனை காலம் முடிந்தும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 16 ஈழத் தமிழர்களை தமிழ்நாடு அரசு விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவிப்பதோடு அதே சிறப்பு முகாமிலிருக்கும் மீதமுள்ள 23 ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்வதோடு நிரந்தரமாக சிறப்பு முகாமை இழுத்து மூட வேண்டுமென்றும் தமிழ் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
பல்வேறு குற்ற வழக்குகளில் மொத்தம் 39 ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மகேந்திரன், டேவிட், சங்கர், நிரூபன், பிரேம்குமார், தேவராஜ், ரீகன், பிரான்சிஸ், முகுந்தன், சுதர்சன், எப்சிபன், திலீபன், ராஜிவன், நகுலேஷ், இட்டாலி ராஜன், கிருபராஜா உள்ளிட்ட 16 ஈழத் தமிழர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
திட்டமிட்ட இன அழிப்போடு யுத்தம் நடந்து முடிந்த ஈழ மண்ணிலிருந்து இந்தியா எங்கள் தந்தையர் நாடு என்று தஞ்சமடைய ஓடி வந்த இடத்தில் இப்படி தண்டனை காலம் முடிந்தும் சிறையில் அடைப்பட்டு கிடக்கிறார்களே என தமிழ்த் தலைவர்கள் பலரும் அவர்களுக்காக குரல் கொடுத்தார்கள். இந்நிலையில் தமிழ்ப் பேரரசு கட்சி இவர்களின் விடுதலையில் சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் பல முறை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததோடு மட்டுமல்லாமல் எத்தனையோ அறிக்கைகளையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அலைபேசியிலும் உரிமையோடு மிகக் கடுமையான நெருக்கடிகளை தந்த நிலையில் இன்று 16 பேர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது பெரு மகிழ்ச்சி தந்திருக்கிறது. தனக்கு விடுதலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை தனது சக கைதிகளாவது விடுதலை ஆகவேண்டுமென தீக்குளித்து போராடிய சகோதரன் உமாரமணன் அவர்களை இந்நேரத்தில் நினைத்து பார்க்கிறேன். வலி உணர்ந்து மேற்கண்ட இவர்களின் விடுதலைக்கு காரணமான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் ஐயா
வெ. இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் ஐயா சைலேந்திரபாபு, தமிழ்நாடு நுண்ணறிவு
பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் ஐயா டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், உள்நாட்டு பாதுகாப்பு காவல்துறை தலைவர் ஐயா ஈஸ்வரமூர்த்தி,
சட்ட அமைச்சர் ஐயா ரகுபதி, மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஐயா மஸ்தான், மறுவாழ்வுத்துறை செயலாளர் அம்மா ஜெசிந்தா, திருச்சி மாவட்ட முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஐயா சிவராசன், தற்போதைய மாவட்ட ஆட்சியர் ஐயா பிரதீப் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.
மேலும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை அவர்களின் ரத்த உறவுகள் நீண்ட நேரம் சந்தித்து உரையாடும் நிகழ்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சூழலில் மீண்டும் அவர்களின் கூடுகைக்கு அரசு அனுமதி அளித்திருப்பது நெகிழ்வுக்குரியது. இதோடு சேர்த்து படிப்படியாக மீதமுள்ளவர்களையும் விடுதலை செய்து அவர்களின் மனைவி பிள்ளைகள் மற்றும் உறவுகளோடு சேர்ந்து மகிழ்வான பெருவாழ்வு வாழ வழி செய்வதோடு விரைவில் சிறப்பு முகாம் என்கிற ஒன்றே தமிழ்நாட்டில் இல்லை என்கிற பிரகடனப்படுத்த தமிழ்நாடு அரசு செய்ய வேண்டுமென்றும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
02.07.2022