பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஐநா நோக்கி கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் நேற்று புதன்கிழமை பிரான்சு ஸ்ரார்ஸ்பேர்க் மாநகரில் 17 ஆம் நாளாகத் தொடர்ந்தது.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் பிரான்சு ஸ்ரார்ஸ்பேர்க் மாநகரில் அமைந்துள்ள அமெரிக்கத் துணைத்தூதரக பகுதியை மனிதநேய ஈருருளிப் பயணம் சென்றடைந்தபோது, அங்கு கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. அங்கு ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தினால் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தின் தலைவர் கிருபானந்தன், அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் பொதுச் செயலாளரிடம் ஆங்கிலமொழியிலான மனுவைக் கையளித்தார்.
தொடர்ந்து அங்கிருந்து பதாதைகள் மற்றும் பதாகைகளைத் தாங்கியவாறு மக்கள் பேரணியாகச் சென்று, 48 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய ஆலோசனைச் சபை(Council of Europ) முன்றிலை அடைந்து அங்கும் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்து ஐரோப்பிய ஆலோசனைச் சபையின் செயலாளரிடம் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய பிரெஞ்சு மொழியிலான மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அத்துடன், ஸ்ரார்ஸ்பேர்க் நாடாளுமன்ற உறுப்பினர் Eric Elkoby அவர்களின் அலுவலகத்திலும் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய பிரெஞ்சு மொழியிலான மனு ஒன்று தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டதுடன், அங்கு சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று வியாழக்கிழமை சுவிஸ் நாட்டைச் சென்றடையவிருக்கின்றது.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.
Home
சிறப்பு செய்திகள் பிரான்சு ஸ்ரார்ஸ்பேர்க் மாநகரில் மனிதநேய ஈருருளிப் பயணத்துடன் இடம்பெற்ற பேரணி!