தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழர் விளையாட்டுத் துறையின் ஒத்துழைப்புடன் நடாத்தும் தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் – 2022, கடந்த 25, 26 ஆகிய இரு நாட்களிலும் லூ புளோமெனில் நகரில் சிறப்பாக நடந்தேறின. 2011 இல் தொடங்கி, 2019 வரை தடையின்றித் தொடர்ந்து, 2020, 2021 களில் கோவிட் பெருந்தொற்றால் தடைப்பட்டிருந்து, இந்த ஆண்டில் 10வது தடவையாக நடைபெற்ற இப்போட்டிகளில் 1005 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இந்தப் போட்டிகளுக்கான மைதானத்தினைத் தந்துதவிய லூ புளோ மெனில் நகரசபை,
பக்கபலமாய்த் துணைநின்ற தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகியவற்றின் கரங்களை நாம் நன்றியுடனும் மகிழ்வுடனும் பற்றிக்கொள்கிறோம்.
மைதானமின்றி போட்டிகள் தடைப்பட்டு விடுமோ என்ற இடர்மிகு நிலையில், நகரசபையுடன் தொடர்புகொண்டு
விளையாட்டு மைதானத்தினை பெற்றுத் தந்ததுடன் அனைத்து வழிகளிலும் எமக்குப் பேருதவியாக இணைந்திருந்த லூ புளோமெனில் தமிழ்ச்சங்கத்தினருக்கும் உளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வானிலை மாற்றங்களைப் பொருட்படுத்தாது, மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் விளையாட்டு
நிகழ்வுகளை திறம்பட நடாத்தியுதவிய போட்டி நடுவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கும் எமது நன்றி.
இல்ல மெய்வல்லுநர் போட்டிகளில் ஆர்வத்துடன் மாணவர்களை இணைத்து, பயிற்றுவித்து, நெறிப்படுத்தி ஒத்துழைத்த அனைத்துத் தமிழ்ச்சோலைகளினதும் நிர்வாகிகள், தமிழ்ச்சங்கத் தலைவர்கள், தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், தமிழ்ச்சோலைச் செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆர்வலர்கள்
அனைவருக்கும் எமது மனதார்ந்த நன்றி.
வெற்றி தோல்விகளைச் சமமாக மதித்து, போட்டிகளில் உற்சாகத்துடன் பங்கேற்று, போட்டிகளை நிறைவாக்கிய அனைத்து மாணவர்களுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைவரதும் தன்னலமற்ற ஒத்துழைப்பால் தடைகளைத் தாண்டி, இப்போட்டிகள் சிறப்பாக நடந்தேறின. இது எமக்கு மேலும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும், வருங்காலத்தில் எமது பணிகளை மேலும் சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் என்ற உந்துதலையும் தருகின்றது. தொடர்ந்தும் தமிழால் தமிழுக்காய் இணைந்திருப்போம்.
௧. ஜெயகுமாரன்
பொறுப்பாளர்