பெரும் தொற்றலை மையமாக
மாறுகிறது பாரிஸ் பிராந்தியம்
மூடிய இடங்கள்(“espaces clos”) மற்றும் சனக் கூட்டம் நிறைந்த பகுதிகளில் பொது மக்கள் மீண்டும் வைரஸ் தடுப்பு மாஸ்க் அணிவதை ஊக்கப்படுத்துமாறு பிரதமர் எலிசபெத் போர்ன் பொலீஸாருக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்திருக்கிறார். சமூக இடைவெளி, கைகளைத் தூய்மையாக்குதல் போன்ற
சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் விடாது பின்பற்றுமாறும் அவர் நாட்டு மக்களைக் கேட்டிருக்கிறார்.
அரசின் இந்த அறிவுரைகள் கட்டாயத்தின் பேரிலானவை (caractère obligatoire) அல்ல என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கிறார். போக்குவரத்துகள் மற்றும் பொது இடங்களில் மாஸ்க் அணிந்திருக்கவேண்டும் என்ற கட்டாய
விதி கடந்த மே மாதம் 16 ஆம் திகதியுடன்
சட்டரீதியாக நீக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.
நோய் எதிர்ப்பை மீறித் தொற்றுகின்ற
ஒமெக்ரோன் திரிபின் புதிய உப திரிபுகள் ஐரோப்பா எங்கும் ஏழாவது தொற்றலையை உருவாக்கிவருகின்றன
என்று எச்சரிக்கப்படும் பின்னணியில்
பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகி
இருக்கிறது.
இன்று மாலை பொதுச் சுகாதாரத் துறை
விடுத்துள்ள தொற்று விவரங்களின் படி
147,248 புதிய தொற்றுக்கள் கடந்த 24
மணிநேரத்தில் பதிவாகியிருப்பது நாட்
டின் தொற்று நிலைமை உச்ச அளவில் எகிறிச் செல்வதைக் காட்டியிருக்கிறது.
குறிப்பாக பாரிஸ் பிராந்தியமே நாட்டில்
அதி கூடிய ஒமெக்ரோன் திரிபு பரவும்
பெரும் தொற்று மையமாக மாறியிருக்கிறது என்று பொதுச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தொற்றாளர்கள் பலரும் மறு தொற்றுக்குள்ளானவர்கள் ஆவர். தீவிரமான நோய் அறிகுறிகள் நீடிக்காத
போதிலும் தொற்றுக்குள்ளான பலரும் புதுவகையான பாதிப்புகளால் அவதியுற
நேர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அறுபது வயதுக்கு மேற்பட்ட பிரிவினரை
விரைவாக நான்காவது தடுப்பூசியை
ஏற்றிக் கொள்ளுமாறு அரசு கேட்டிருக்கிறது. ஊசி ஏற்றா தவர்களுக்கு விரைவில் நினைவூட்டும்
கடிதங்கள் சுகாதாரத் துறையினரால் அனுப்பி வைக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
28-06-2022