பிரான்சில் இரு தினங்கள் சிறப்படைந்த தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்- 2022

0
1332

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடாத்திய தமிழ்ச்சோலைப் பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் போட்டி 12 ஆவது அகவையாக 10 ஆவது தடவையாக மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டுப்போட்டி, இரண்டு ஆண்டுகள் கோவிட் பேரிடர் காரணமாக இடம்பெறாத நிலையில் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கடந்த (25.06.2022) சனிக்கிழமை புளோமெனில் நகரில் அமைந்துள்ள மைதானத்தில் தெரிவுப்போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று (26.06.2022) ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டிகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.


இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் கட்சன் அவர்கள் ஏற்றிவைக்க். பிரெஞ்சுத் தேசியக்கொடியை தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவைச் செயலாளர் திரு.சச்சிதானந்தம் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தமிழீழத் தேசியக் கொடியை புளோமெனில் தமிழ்ச்சோலை நிர்வாகி ஜெயரூபன் சாந்தி அவர்கள் ஏற்றிவைத்தார்.


இதனைத் தொடர்ந்து மாவீரர் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை இத்தாவில் பளைச் சமரில் வீரச்சாவடைந்த மாவீரர் 2 ஆம் லெப்.காண்டீபன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கத்தைச் செலுத்தியிருந்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து,

தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகக் கொடியை அதன் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புக்கொடியை அதன் பொருளாளர் திரு. விஸ்வநாதன் அவர்களும் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து சமநேரத்தில் 6 இல்லங்களுக்கான கொடிகளையும் இல்லங்களின் பொறுப்பாளர்கள் ஏற்றிவைத்தனர்.


ஒலிப்பிக் தீபத்தை மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு மெய்வல்லுநர் போட்டித் தலைவன், தலைவியிடம் கையளிக்க அவர்கள் வீரர்களோடு மைதானத்தை வலம் வந்து இந்த ஆண்டுக்கான மெய்வல்லுநர் போட்டித் தலைவன் செல்வன் தனபாலசிங்கம் தினேஸ் மற்றும் மெய்வல்லுநர் தலைவி செல்வி உதயகுமார் திசாமியா ஆகியோரிடம் ஒலிம்பிக் தீபத்தை ஒப்படைக்க அவர்கள் ஒலிம்பிக் சுடரினை ஏற்றிவைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தொடர்ந்து நடுவர்களுக்கான சத்தியப் பிரமாணத்தை நடுவர்களில் ஒருவரான திருமதி ஜெனனி அவர்கள் செய்துவைத்தவுடன், போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்களின் வாழ்த்துக்களோடு அனைவரின் கரகோசத்துக்கு மத்தியில் போட்டிகள் இனிதே ஆரம்பமாகின.


சோதியா இல்லம் (சிவப்பு), அங்கையற்கண்ணி இல்லம் (நீலம்), ராதா இல்லம் (மஞ்சள்), மாலதி இல்லம் (செம்மஞ்சள்), சார்ள்ஸ் இல்லம் (பச்சை), ஜெயந்தன் இல்லம் (ஊதா)ஆகிய இல்லங்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்தன.
நிகழ்வுகளை திரு.வினோஜ், திரு.கிருஸ்ணா, திருமதி ராகினி இவர்களோடு தமிழ்ச்சோலையில் வளர்தமிழ் 12 இனை நிறைவுசெய்து தமிழியல் பட்டப் படிப்பைத் தொடரும் செல்வி இயல்வாணி அவர்கள் திறம்பட தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழி அறிவிப்புக்களின் ஊடாகக் கொண்டுசென்றதைக் காணமுடிந்தது.


போட்டிகளாக ஓட்டம், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், சாக்கோட்டம், குண்டுபோடுதல், தட்டெறிதல், முப்பாய்ச்சல், நின்றுபாய்தல், பந்தெறிதல், அஞ்சல் ஓட்டம் போன்ற விளையாட்டுக்கள் சிறப்பாக இடம்பெற்றிருந்த நிலையில், பார்வையாளர்களுக்கான சங்கீதக்கதிரை, சிறார்களுக்கான விளையாட்டுக்கள், பார்வையாளர் மற்றும் பழைய மாணவர்களுக்கான ஓட்டம் என்பனவும் விறுவிறுப்பாக அமைந்திருந்தன.
முடிவில் 573 புள்ளிகளைப்பெற்று ராதா இல்லம் முதலிடத்தையும் 358 புள்ளிகளைப் பெற்று சோதியா இல்லம் இரண்டாமிடத்தையும் 311 புள்ளிகளைப்பெற்று அங்கையற்கண்ணி இல்லம் மூன்றாம் இடத்தையும் தமதாக்கிக்கொண்டன. நிறைவாக வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கான மற்றும் இல்லங்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது.
சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் நிகழ்த்தியிருந்தார். மாணவர்களின் உணர்வுமிக்க விளையாட்டுக்களைப் பாராட்டியிருந்த தோடு, தொடர்ச்சியான விடுதலை நோக்கிய சிந்தனையாக அவருடைய உரை அமைந்திருந்தது.
போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் போட்டியை நிறைவு செய்து உரையாற்றிருந்தார். அவர் தனது உரையில், குறித்த விளையாட்டுப்போட்டியானது மிகவும் சிறப்பாக இடம்பெற்றமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டிருந்த அவர், தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்ததாக இந்நிகழ்வு அமைந்துள்ளதாகவும் நிகழ்வு சிறப்படைய ஒத்துழைத்த அனைவரையும் நன்றியோடு பாராட்டியிருந்தார்.
பிளோமினெல் நகரபிதா அவர்களும் போட்டியாளர்களை வாழ்த்தியதுடன், பரிசளிப்பு நிகழ்விலும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் சார்பில் உரை நிகழ்த்திய திரு.அகிலன் அவர்கள், அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்த அதேவேளை, தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் முதலிடத்தைத் தனதாக்கிய ராதா இல்லத்துக்கே சுற்றுக்கிண்ணம் சொந்தமாகிறதாக உற்சாகத்தோடு தெரிவித்திருந்தார்.
உற்சாக மிகுதியோடு ராதா இல்லத்தினர் சுற்றுக்கிண்ணத்தோடு மைதானத்தை வலம்வந்ததுடன், கட்டிகை வெட்டி ஆரவாரித்து மகிழ்ந்தமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
நிறைவாக கொடிகள் இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here