தேசிய ஒற்றுமை அரசு ஒன்றுக்கு எதிர்க்கட்சிகள் இணங்கவில்லை!

0
129

அரசியல் நிலைவரம் குறித்த
உரையில் மக்ரோன் தகவல்

பிரான்ஸின் அதிபர் மக்ரோன் இன்றிரவு
தொலைக்காட்சி வழியாக நாட்டுக்கு
வழங்கிய உரையில், தேர்தலுக்குப் பிந்திய அரசியல் நிலைவரம் குறித்துப்
பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் அவரது ஆளும் கட்சி அணி அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறவிட்ட நிலையில் பிளவுபட்ட நாடாளுமன்றம்
ஊடாக நாட்டின் அரசாட்சியை எவ்வாறு
முன்னெடுப்பது என்பது குறித்து அவர்
உறுதியான திட்டம் எதனையும் அறிவிக்க
வில்லை. நேற்றும் இன்றும் எதிர்க்கட்சிகளது பிரதிநிதிகளுடன் நடத்திய ஆலோசனைகளில் “தேசிய ஒற்றுமை அரசாங்கம்” (National unity government) ஒன்றை நிறுவுகின்ற உத்தேச யோசனையைக் கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை
என்ற தகவலை மக்ரோன் தனது உரையில் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்துக்குத் தெரிவான சகல
உறுப்பினர்களையும் மரியாதையுடன்
வரவேற்பதாகத் தெரிவித்த மக்ரோன்,
“நாம் கூட்டாக வெவ்வேறு விதத்தில் ஆட்சி செய்யவும், சட்டம் இயற்றவும் கற்றுக்கொள்ள வேண்டும்.நீங்கள் விரும்பியது போன்று உரையாடல், செவிமடுத்தல், மரியாதை ஆகியவற்றில் புதிய சமரசங்களை உருவாக்குவோம். அதை நான் கவனத்தில் கொள்கிறேன். அதற்காகப் பல ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும், அதற்கு இன்னும் காலநேரம்
அவசியம் “-என்றும் கூறினார்.

வளமான நாட்டைப் பேணுவதற்கு
பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மிக அவசியமானவை என்பதைக் குறிப்பிட்ட
அவர், கூட்டு அரசாங்கம் ஒன்றை நிறுவ முடியாது விட்டாலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற ஒவ்வொரு பிரேரணைகள் (text by text) விடயத்தில் தனித்தனியே குழுக்களது ஆதரவைப் பெறுவதற்கான உடன்பாடுகளைக் கட்டியெழுப்ப முடியும் என்றும்
நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை,

ஆளும் கட்சிக் கூட்டணி பெரும்பான்மை
பெறத் தவறியதை அடுத்து பிரதமர்
எலிசபெத் போர்ன் தனது பதவி விலகல்
கடிதத்தை அதிபர் மக்ரோனிடம் சமர்ப்பித்துள்ளார். எனினும் அவர்
அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று
எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது.
போர்ன் தலைமையிலான அமைச்சரவை
தொடர்ந்தும் பதவியில் நீடிக்கிறது என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பதவியில் நீடிக்கத் தகுதி அற்றவர் என்று
அவர் மீது அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

பிரான்ஸின் சமீப கால வரலாற்றில் நாட்டைத் திறம்பட ஆட்சி செய்ய முடியாத
நாடாளுமன்றக் குழப்ப நிலையை ஜனாதிபதி எதிர்கொள்கிறார். ஏப்ரலில் நடந்த அதிபர் தேர்தலில் வென்றதன் மூலம் நாட்டில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது தடவையாகவும் மேலும் ஐந்து ஆண்டு காலத்துக்குத் தெரிவாகிய அதிபர் என்ற பெருமை
அவருக்குக் கிடைத்தது. ஆயினும் அதன் பிறகு நடைபெற்றுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அவரது ஆட்சிக்கான பெரும்பான்மையை வழங்கவில்லை.
அவரது அமைச்சரவையில் இடம்பெறும்
மூவர் தேர்தலில் தோல்வியைத் தழுவ
நேர்ந்தது.

எதிர்பாராத விதமாக தீவிர வலதுசாரிக்
கட்சியும் இடது சாரிகளது கூட்டணியும்
அதிக இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் பலமான நிலைக்கு
வந்துள்ளன. மக்ரோனின் கூட்டணிக்கு
அறுதிப் பெரும்பான்மை கிடைப்பதற்கு
இன்னும் 44 உறுப்பினர்களது ஆதரவு அவசியம். அதனை எவ்வாறு எந்தத் தரப்பிடம் இருந்து பெறுவது என்பதில்
குழப்பமான நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் மக்ரோன் எதிர்க் கட்சிகளின் தலைவர்களை எலிஸே மாளிகைக்கு அழைத்துப் பேசியிருந்தார்.
தீவிர இடது சாரி மெலன்சோன் தரப்புடனோ அல்லது தீவிர வலதுசாரி
மரின் லூ பென்னுடனோ கூட்டு வைப்பதற்கு மக்ரோன் அடியோடு விரும்பவில்லை என்று அவரது கட்சியினர் தெரிவிக்கின்றனர். 61
ஆசனங்களை வென்றுள்ள வலதுசாரி
ரிப்பப்ளிக்கன் (Republicans LR) கட்சியுடன்
மட்டுமே நாடாளுமன்றில் அரசியல் கூட்டணியை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு
உள்ளது.

ஓய்வு பெறும் வயது எல்லையை 62 இல் இருந்து 65 ஆக உயர்த்துவது உட்பட
தனது நம்பிக்கைக்குரிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் எதனையும் சட்டரீதியாக முன்னெடுப்பதற்கு வேண்டிய நாடாளுமன்றப் பெரும்பான்மை கிடைக்காமற்போயிருப்பது மக்ரோனின் அரசியல் பதவிக் காலத்தில் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

       -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                          22-06-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here