ஐநா மனித உரிமை பேரவையின் 30 ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை கட்டடத்தில் இலங்கை தொடர்பில் பல்வேறு உத்தியோகப்பற்றரற்ற சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட முண்ணனி மனித உரிமைகள் குழுக்கள், இலங்கை தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தன.
அனைத்துவிதமான பாகுபாடு மற்றும் இனவாதத்திற்கு எதிரான சர்வதேச இயக்கம், பசுமை தாயகம் அறக்கட்டளை, அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள மக்கள் சமூகம் மற்றும் ஆக்கபூர்வ சமூகத் திட்ட கூட்டணி உள்ளிட்ட ஏனைய அரச சார்பற்ற அமைப்புக்களும் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளன.
இந்த சந்திப்புக்களில் இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் வியாழக் கிழமை இலங்கை தொடர்பில் உத்தியோகப்பற்றரற்ற சந்திப்பொன்றை அமெரிக்கா நடத்தவுள்ளது.
ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாக தமது நாடு கொண்டு வரவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவை திரட்டும் நோக்கில் இந்த சந்திப்பை அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ளது.