பட்டினி நெருக்கடி மேலும் பலரை இடம்பெயரச் செய்யும்: ஐ.நா.எச்சரிக்கை!

0
200

உக்ரைனில் ரஷ்யாவின் போர் உலகில் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை முதல் முறை 100 மில்லியனை தாண்டுவதற்கு காரணமாகி இருக்கும் நிலையில் பட்டினி நெருக்கடி மேலும் பலரை இடம்பெயரச் செய்யும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்வதை தடுப்பதற்கு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து தீவிரம் அடைந்திருக்கும் உலக உணவு பாதுகாப்பின்மை நெருக்கடிக்கு தீர்வு காண்பது முக்கியமாக உள்ளது என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிரான்டி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“அதிகரிக்கும் எண்ணிக்கை எவ்வளவு என்று என்னிடம் கேட்டால் அது எனக்குத் தெரியாது. ஆனால் அது பெரும் எண்ணிக்கையாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.

உலகின் ரொட்டிக் கூடை என்று அழைக்கப்படும் உக்ரைன மீது ரஷ்யா மேற்கொண்டிருக்கும் முழு வீச்சிலான படையெடுப்பு, சர்வதேச அளவில் தானியங்கள் மற்றும் உரத் தட்டுப்பாட்டுக்குக் காரணமாகியுள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை சர்வதேச அளவில் அதிகரித்து மில்லியன் கணக்கான மக்கள் பட்டினி நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

“இதனை உடன் தீர்க்காவிட்டால், தாக்கம் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்” என்று கிரன்டி எச்சரித்தார். எனினும் இது ஏற்கனவே அழிவை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஐ.நா அகதிகள் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை வெளியீட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி 2021 முடிவில் சாதனை எண்ணிக்கையாக 89.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதோடு அது ஒரு தசாப்தத்தில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பின் 14 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் உலகில் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை முதல்முறை 100 மில்லியனைத் தாண்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here