ஐரோப்பிய தலைவர்கள் மூவரது
கீவ் விஜயத்தின் உள் தகவல்கள்
பிரான்ஸின் அதிபர் மக்ரோன் ஜேர்மனிய சான்சிலர் ஒலாப் சோல்ஸ், இத்தாலியப் பிரதமர் மரியோ ட்ராகி
மூவரும் உக்ரைன் தலைநகர் கீவுக்குச்
சென்றிருக்கின்றனர். அவர்களுடன்
ருமேனியாவின் தலைவர் கிளாஸ் அயோஹானிஸும் (Klaus Iohannis) உடன் சென்றுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய மூன்று நாடுகளது தலைவர்களின் இந்த ஒருமித்த விஜயம் குறித்த செய்திகள் ஏற்கனவே கசிந்திருந்த போதிலும்
மூவரும் எங்கிருந்து எந்த வழியாகப் போர்ப்பூமிக்குள் செல்லப்போகின்றனர்
என்ற விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.
போலந்தில் உக்ரைன் எல்லையோரம்
உள்ள பழைய ரயில் நிலையம் ஒன்று
மூன்று தலைவர்களதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தினால்
தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. முதலில் விமானம் மூலம் போலந்துக்கு வருகைதந்த சோல்ஸ், மக்ரோன், ட்ராகி மூவரும் பின்னர் தனித்தனியே அந்த ரயில் நிலையத்துக்குச் சாதாரண பயணிகள் போன்று கார்களில் வந்து இறங்கினர். இரவு ரயிலின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் தலைவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. உணவு, குடிபானங்கள் அடங்கிய பெட்டிகள் சிலவற்றுடன் மக்ரோன் ரயிலில் ஏறினார்
என்று செய்தி வெளியாகியுள்ளது.
மூன்று தலைவர்களும் சுமார் பதினொரு மணி நேரம் இரவுப் பயணம் செய்தே
கீவ் நகரைச் சென்றடைந்தனர்.
வழியில் ரயில் உக்ரைன் எல்லைக்குள்
நுழைந்த சமயம் அந்நாட்டின் எல்லைக் காவல் படையினர் அந்த மூன்று சிறப்புப் பயணிகளது கடவுச் சீட்டுக்களையும் பரிசோதித்தனர் என்ற தகவலை ஏஎப்பி
மற்றும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்
டுள்ளன.
போராயுதங்களும் படை வாகனங்களும்
பயணிக்கின்ற எல்லைப் புற வழிகளைக் கடந்து சென்ற ரயிலில் மூன்று முக்கிய ஐரோப்பியத் தலைவர்கள் பயணிக்கின்றனர் என்ற தகவல் மிக
ரகசியமாகப் பேணப்பட்டது. ஆயினும்
மூவரினதும் மெய்க்காவலர்கள் மற்றும் மூன்று நாடுகளினதும் புலனாய்வு அதிகாரிகள் சில செய்தியாளர்கள் உட்பட வேறு பலரும் அதே ரயிலில்
சாதாரண பயணிகள் போன்று ஏறியிருந்தனர். பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி நாடுகளது வெளிநாட்டுப் பாதுகாப்புடன் தொடர்புடைய உளவுப்
பிரிவினர் ரயில் பயண வழி முழுவதும்
மிகத் தீவிரமான கண்காணிப்பு வலயங்
களை உருவாக்கி இருந்தனர் என்று
கூறப்படுகிறது.
தலைவர்கள் கீவ் நகரத்தின் ரயில் நிலையத்தில் இறங்குவதற்கு முன்பாக
வான் தாக்குதல் எச்சரிக்கை செய்யும்
சைரன்கள் ஆறு தடவைகள் ஒலித்தன
என்று செய்தி வெளியாகியுள்ளது.
நாட்டின் கிழக்கே ரஷ்யப்படைகளது தாக்குதல்கள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. ரஷ்ய ஏவுகணைகள் ரயில் நிலையங்களையும்
ரயில் மார்க்கங்களையும் தாக்கி வருகின்ற போதிலும் தலைநகர் கீவுக்குச் செல்வதற்கு அதைவிடப் பாதுகாப்பான
வேறு வழிகள் கிடையாது. பெப்ரவரி 24 இல் போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் வான் பரப்பு மூடப்பட்டுள்ளது.
தலைநகருக்குச் செல்லும் பிரதான பெரும் தெருக்களும் பாலங்களும்
தாக்குதல்களால் அழிந்துள்ளன. இந்த
நிலையில்தான் வெளிநாடுகளின்
தலைவர்கள் ரயில் மார்க்கமாகக் கீவ்
செல்வதைப் பாதுகாப்பு எனக் கருதுகின்றனர்.
படம்-1 :இரவுப் பொழுதில் ரயில் மேடையில் ஒன்றாக நடந்து
வந்த தலைவர்கள்.
படம் 2 :விசேட ரயில் பெட்டியின் உள்ளே ட்ராகி, மக்ரோன், சோல்ஸ்.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
16-06-2022