உள்ளக விசாரணையில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடிய நிலையில் இலங்கை இல்லாத நிலையில் எவ்வாறு நீதியான விசாரணை நடக்கும் இது முழுமையாக ஏமாற்று வேலையே என்பதனை தமிழரசுக்கட்சியின் தலைமையும் அறிய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் அக்கட்சியின் அலுவலகத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர் ‘தேர்தல் முடிந்தவுடன் நாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. ஏனென்றால் பல மாற்றங்கள் நடந்திருக்கின்றது. ஜனாதிபதி மாற்றப்பட்டார், அரசியல்முறை மாற்றப்பட்டது. தற்போது இரண்டு கட்சிகள் முழுமையாக இல்லாவிட்டாலும் அரைகுறையாக இணைந்து அமைச்சராவையை ஒருவாக்கி அதற்கு தேசிய அரசாங்கம் என்கின்றனர். ஆகவே இதனூடாக பல விடங்களை அவர்களால் சாதிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இதற்கும் அப்பால் பல ஆண்டுகளுக்கு பின்னர் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக வந்துள்ளார். ஆகவே மாற்றங்கள் என்பது பல்வேறுபட்டவிதத்தில் ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழ் மக்களினுடைய தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பது அதனை எவ்வாறு கையாள்வது போன்ற பல பிரச்சனைகளும் எமக்கு முன்னால் வந்துள்ளன.
உண்மையில் இதில் உள்ள பிரச்சனை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் தமிழ் மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட யுத்த குற்றங்கள் மனித குலத்தின் மீதான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் அதற்கும் அப்பால் இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அந்த விசாரணை அறிக்கை நேற்று இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 22 ஆம் திகதிக்கு முன்னதாக இந்த அறிக்கையை நீங்கள் பார்க்க கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.