எரிந்து தணலாகிய நிலக்கரி மீது நடந்து சாதனை செய்ய முயன்றவர்களில் 25 பேர் கால்களில் படுகாயமடைந்தனர். அவர்களில் 13 பேர் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுவிற்சர்லாந்தின் சூரிச் கன்ரனில் Au peninsular என்ற இடத்தில் செவ்வாய் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
கால்கள் எரிந்து படுகாயங்களுக்குள்ளா
னவர்களை ஏற்றிச் செல்லப் பத்து அம்புலன்ஸ் வண்டிகள் அவசரமாக அங்கு அழைக்கப்பட்டன.
தரையில் சில மீற்றர்கள் நீளத்துக்கு நிலக்கரி எரியூட்டப்பட்டுத் தணல் மேடை
உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வெற்றுக் கால்களுடன் நடந்து சென்றவர்களே
காயமடைய நேரிட்டுள்ளது.
மத அனுட்டானங்கள், நேர்த்திக்கடன் போன்றவற்றுக்காகத் தீ மிதிக்கின்ற
பாரம்பரிய நிகழ்வுகள் இந்தியா உட்பட
பல நாடுகளில் காணப்படுகின்றன.
அவ்வாறன்றித் தற்சமயம் வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பலரும் தீயில் நடக்கின்ற போட்டிகளை, சவால்களை
ஏற்பாடு செய்து நடத்திவருகின்றனர்.
சுவிஸ் நிறுவனம் ஒன்று தனது துணிச்சல் மிக்க ஊழியர்களுக்காக
இந்தத் தீ மிதிப்பை தனிப்பட்ட முறையில் ஒழுங்கு செய்திருந்தது என்ற தகவலை
சூரிச் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. தீயில் நடப்பதற்குத்
தனது ஊழியர்கள் எவரையும் நிர்ப்பந்தப்படுத்தவில்லை என்றும் விருப்பத்தின் அடிப்படையிலேயே அவர்கள் அதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர் எனவும் ‘Goldbach’ என்ற அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் செய்தி ஊடகங்களில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகியிருப்பதை அடுத்து சூரிச் காவல்துறையினர் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
15-06-2022