பாலங்கள் உடைக்கப்பட்டு
கேந்திர நகரம் துண்டிப்பு!!
பிரான்ஸின் அதிபர் மக்ரோன், ஜேர்மனி யின் சான்சிலர் ஒலாப் சோல்ஸ்
இத்தாலியப் பிரதமர் மரியோ ட்ராகி (Mario Draghi) ஆகிய மூன்று ஐரோப்பியத் தலைவர்களும் கூட்டாக உக்ரைன்
தலைநகர் செல்லவுள்ளனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜேர்மனியில் இம்மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜி7(G7) நாடுகளது தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு முன்பாக உக்ரைனுக்கான விஜயம் இடம்
பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை
முழு அளவில் வெளிப்படுத்தும் நோக்கில்
தலைவர்கள் மூவரும் ஒரே சமயத்தில் அங்கு செல்லவுள்ளனர் என்று கூறப்படுகிறது. எனினும் இத் தகவல்
அரசுகள் தரப்பில் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலின் முதற்சுற்று
வாக்களிப்புக்குப் பின்னர் மக்ரோன்
ருமேனியாவுக்குப் புறப்பட்டுள்ளார். சான்சிலர் ஒலாப் சோல்ஸ் ஏற்கனவே பால்டிக் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து இத்தாலியப்
பிரதமர் சகிதம் கீவ் நகருக்குச் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் போர் நாட்டின் கிழக்குப் பகுதியில் மிகத் தீவிரமடைந்துள்ளது.
அங்கு ரஷ்யப் படைகளின் கை ஓங்கிவருகிறது. கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சேவேரொடொனேட்ஸ்க்(Severodonetsk)
நகரம் ரஷ்யப் படைகளால் வெற்றிகொள்ளப்படும் நிலையில் இருக்கிறது. நகருக்குச் செல்லும் வீதிப்
பாலங்கள் அனைத்தையும் ரஷ்யப்படைகள் நிர்மூலமாக்கிவிட்டதால்
நகரம் வெளித் தொடர்புகளில் இருந்து
துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் படைகளின்
வெடிமருந்துக் கையிருப்பு தீர்ந்து வருவதாக அங்குள்ள அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
13-06-2022