பிரான்ஸின் நாடாளுமன்றத் தேர்தலின் முதற்சுற்று வாக்களிப்பு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது. 577 ஆசனங்களைக் கொண்ட தேசிய நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத்
தெரிவு செய்வதற்கான இத் தேர்தலில்
அதிபர் மக்ரோனின் கட்சி , இடதுசாரிக் கூட்டணியிடமிருந்து எதிர்பாராத பெரும் சவாலைச் சந்திக்க நேர்ந்துள்ளது.
முன்னாள் மார்க்சிஸ்ட் ஜோன் லூக் மெலன்சோன் (Jean-Luc Mélenchon)
தலைமையில் உருவாகியிருக்கும் ஐந்து
கட்சிகளது இடதுசாரிக் கூட்டணி, இந்தத் தடவை மக்ரோனுக்கான நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
குறுகிய வாக்குகள் வித்தியாசத்துடன்
அதிபர் தேர்தலில் மூன்றாவது இடத்தை
அடைந்த ஜோன் லூக் மெலன்சோன்,
நீண்ட காலம் தன்னோடு முரண்பட்டு
நின்ற பிரான்ஸின் சோசலிஸக் கட்சி, பசுமைக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பவற்றைத் தன்னோடு அரவணைத்துக்கொண்டு “நியூப்ஸ்”(Nupes – Nouvelle Union Populaire Écologique et Sociale) என்ற பெயரில் கூட்டணி வியூகம் அமைத்துத் தேர்தலை எதிர்கொள்கிறார்.
“நானே அடுத்த பிரதமர்” என்று தன்னைத்
தானே பிரகடனம் செய்துகொண்டுள்
ளார். அவரது கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருவதைக் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
முதற் சுற்று வாக்களிப்பில் அதிபர் மக்ரோனின் கூட்டணிக்கும் மெலன்சோனின் அணிக்கும் இடையே
மிக நெருக்கமான போட்டி இருக்கும் என்று ஆகப் பிந்திய கருத்தெடுப்புகள்
தெரிவிக்கின்றன. இரண்டாவது கட்ட
வாக்களிப்பு ஜூன் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். பதிவுசெய்யப்பட்ட 48.7 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத்
தகுதிபெற்றுள்ளனர்.
577 ஆசனங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை
பெறவேண்டுமானால் குறைந்தது 289 ஆசனங்களை வெல்லவேண்டும். 2017 தேர்தலில் மக்ரோனின் “La République en Marche” – LREM கட்சி தனித்து 306 இடங்களை வென்றது. அதன் ஆதரவுக்
கட்சியான MoDem 42 ஆசனங்களைக்
கைப்பற்றியிருந்தது. இந்தத் தடவை
அது போன்ற அறுதிப்
பெரும்பான்மையை அதிபரது கட்சி வெல்லுமா என்பதை உறுதியாகக் கூறமுடியாதவாறு தேர்தல் களநிலைமைகள் மாறியுள்ளன.
பிரான்ஸில் அதிபரும் நாடாளுமன்றமும் வெவ்வேறு கட்சிகளது கட்டுப்பாட்டில் வருவதைத் தவிர்ப்பதற்காகவே அதிபர் தேர்தல் நடந்து ஒரு மாத காலத்தினுள் நாடாளுமன்றத்துக்கான தேர்தலும் உடனடியாகவே நடத்தப்படுகிறது.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
10-06-2022