ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாக ‘எழுச்சிக்குயில் 2022″ தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டியானது யூன் 04 சனி மற்றும் 05 ஞாயிறு ஆகிய இருநாட்களும் சொலத்தூர்ண் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் நினைவேந்தல் அகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி நிகழ்வில் இருநாட்களும் பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர், மலர்மாலை அணிவித்தல், அகவணக்கம், நிகழ்வுச்சுடர், மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின.
வளர்ந்துவரும் இசைக்கலைஞர்களைத் தாயகப்பற்றுடன் வளர்த்தெடுக்க வேண்டுமெனவும், இளைய தலைமுறையினரிடம் தாயகம் சார்ந்த இன உணர்வைப் பேணவும், வீரவரலாற்றை நினைவிற் கொள்ளவும், புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்களின் திறமைகளை ஊக்குவித்து மதிப்பளிக்கும்; முகமாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வில் பங்குபற்றி சிறப்பித்த நடுவர்கள், போட்டியாளர்கள், எழுச்சிஇசை வழங்கிய இளம் இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இணைந்து செங்கம்பளம் விரித்த நுழைவாயிலினால் மண்டபத்திற்குள் அழைத்துவரும்போது இருமருங்கிலும் தமிழீழத் தேசியக்கொடிகளை ஏந்தியமக்கள் உற்சாகமளித்தகாட்சி நிகழ்வின் மகுடம்.
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் சுவிஸ் நாட்டில் உருவாக்கி தேசியத்திற்கு அளித்த இளையோர்களும், தாயக இசையமைப்பாளர்களும், தாயகப்பாடகியும் இணைந்து நடுவர்களாகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏழாவது முறையாக காந்தள், செண்பகம், வாகை, சிறுத்தை, வளர்ந்தோர், இணை எழுச்சிக்குயில் போன்ற பிரிவுகளாக நடாத்தப்பெற்ற போட்டிகளில் இலட்சிய உறுதியுடனும், ஆர்வத்துடனும்;, மொழியாற்றலுடனும், இசையாற்றலுடனும், உணர்வுடனும் எழுச்சிப்பாடல்களைப் பாடிய போட்டியாளர்களுடன் இசைவழங்கிய இசைக்கலைஞர்களையும் வாழ்த்துவதோடு, பங்குபற்றிய அத்தனை போட்டியாளர்களுக்கும் அவர்களை ஊக்கப்படுத்தி வழிகாட்டிய பெற்றோர்களுக்கும், நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் இத்தருணத்தில் எமது பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேற்கூறப்பட்ட பிரிவுகளில் பங்குபற்றிய அறுபதிற்கும் மேற்பட்ட போட்டியாளர்களிலிருந்து தகுதி பெற்ற எழுவர் தெரிவுசெய்யப்பட்டு, எழுச்சிக்குயில் 2022 விருதுக்கான இறுதிப்போட்டி நடாத்தப்பெற்றதுடன் இறுதிப்போட்டியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று ‘எழுச்சிக்குயில் 2022″ விருதை செல்வி கனிஷா பாலகுமரன் அவர்கள் மண்டபம் அதிர்ந்த கரவொலியோடு தனதாக்கிக் கொண்டார்.
வாழிட நாடுகளின் பன்மொழி, பல்லினப் பண்பாட்டுச் சூழலிலும் தமிழின உணர்வோடும் தாயகப்பற்றோடும் எழுச்சிக்குயில் 2022 தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி நிகழ்விலே பங்குபற்றிய அனைவருக்கும் நினைவுப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் நிகழ்வில் ஓவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு வெற்றிக்கேடயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி கையேற்கப்பட்டு, தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நிறைவுபெற்றன.
இப்போட்டி நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்;கள், போட்டியாளர்கள், நடுவர்கள், இசைக்கலைஞர்கள், ஆசிரியர்கள், அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள், இனஉணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளையும் நன்றியன்போடு பாராட்டுதல்களையும் தேசியம் நோக்கிய பணிதொடர வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.