யேர்மன் தலைநகரில் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்!

0
186

யேர்மன் தலைநகரில் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்/ தமிழீழ மாணவர் எழுச்சி நாள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் தியாகி பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவனாக இவர் கல்வி பயின்றார். அக் காலத்தில் கல்வி தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது. இது தியாகி பொன். சிவகுமாரனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு மாணவனாய் தன்னுடைய மாணவ சமூகத்தின் உரிமை மறுக்கப்பட்டு தாம் ஒடுக்கப்பட்டபோது சிவகுமாரன் போராடத் துணிந்தார். கல்வித் தரப்படுத்தலுக்கு எதிராக தொடங்கிய மாணவர் பேரவையில் அவர் தன்னையும் இணைத்தார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதன் முதலில் சயனைட் அருந்தி உயிர்நீத்தவர் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களே . தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இலங்கை அரசின் அநீதிகளுக்கு எதிராக போராடும் வல்லமையை இளைஞர்களிடத்தில் தியாகி சிவகுமாரன் ஏற்படுத்தினார். இவரது மரண நிகழ்வின்போது முதன் முதலில் பெண்கள் சுடலைக்கு வருகை தந்த மாற்றமும் இடம்பெற்றது. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தியாகி சிவகுமாரனின் மரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தியாகி பொன்.சிவகுமாரனின் வாழ்வையும் மரணத்தையும் கையில் எடுத்த போராட்டத்தையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. சாதாரணமாக எல்லா மாணவர்களையும் போல தன் படிப்பில் மாத்திரம் அவர் கவனம் செலுத்தியிருக்கவில்லை. அவர் எல்லா மாணவர்களின் படிப்பிலும் கவனம் செலுத்தினார். அவர் எல்லா மாணவர்களின் நலனினும் கவனம் செலுத்தினார்.அவர் ஈழ மக்களின் நலனின் கவனம் செலுத்தினார். தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்காது, தொடர்ந்தும் அவர்களை ஒடுக்கியபோது தியாகி பொன். சிவகுமாரன் இப்படியான போராட்டம் ஒன்றே தேவை என உணர்ந்தார்.

தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 48 ஆவது ஆண்டு நினைவேந்தல் பேர்லின் Freie Universität வளாகத்தில் உள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இத் தூபி விடுதலைக்காக போராடி மடிந்த 10 Freie Universität உயர்கல்விமாணவர்களுக்காக நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் கலந்துகொண்ட இளையோர்கள் மற்றும் மாணவர்கள் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்தூவி வணங்கினார்கள்.

இறுதியில் தமிழீழ விடுதலையை காணும் வரை தலைமுறை கடந்தாலும் தளராது போராடுவோம் எனும் உறுதியுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here