பிரான்சில் 93 மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் Jean-Christophe LAGARDE    அவர்களுக்கும், தமிழ்மக்களுக்குமான சந்திப்பு!

0
352

93 மாவட்டத்தில் Drancy- Bobigny- Le Bourget ஆகிய தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியாளராக நிற்கும் மதிப்புக்குரிய முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் Jean-Christophe LAGARDE    அவர்கள் பிரான்சில் வரும் யூன் 6 ஆம் 12 ஆம் நாளில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை சந்திப்பை 02.06.2022 வியாழக்கிழமை மாலை 19.30 மணிக்கு (L’ESPACE CULTUREL மண்டபத்தில் நடாத்தியிருந்தார். இச் சந்திப்பில்  பெருந்தொகையான பிரெஞ்சு மக்களும், பல்லின மக்களும் கலந்து கொண்டிருந்தனர். இச்சந்திப்பி கலந்து கொள்ளுமாறு பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தினருக்கும், தமிழ்ச்சங்கக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய பலதமிழ்மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தனது தேர்தல் பரப்புரையில் கடந்த காலத்தில் தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது மக்களுக்காக தன்னால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் பற்றியும் மீண்டும் தான் 2022 ல் தெரிவு செய்யப்பட்டால் 93 பகுதியில் நிலக்கீழ் போக்குவரத்து, ஓய்வூதியத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வயது வரம்பும், இளையோர்களுக்கான நிதியுதவி பற்றியும், இன்று பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது பொருட்களின் விலைகளில் கட்டுப்பாடும், கடந்த காலத்தில் இப்பிரதேசங்களில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட பல செயற்பாடுகள் பற்றியும் தெரிவித்திருந்தார். இந்த இடத்தில் வாழும் தமிழ் மக்கள் பற்றியும் அவர்கள் கடந்தகாலத்தில் தனக்கும், தான் அவர்களுக்காகவும் எவ்வாறு பயணித்திருந்தார் என்பதையும் தெரிவித்திருந்தார்.

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்மக்களுடன் சகலவழிகளிலும் பயணித்தவர் மதிப்புக்குரிய Jean-Christophe LAGARDE அவர்களாகும், நடைபெற்று முடிந்த டிறான்சி மாநகரத்தேர்தலில் போட்டியிட்டு முதல்வராக தெரிவு செய்யப்பட்ட இவரது துணைவியாரும் தமிழ்மக்களின்  பலமாக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 15 ம் நாள் இவரின் பகுதியில் தமிழீழ தேசியக்கொடியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டதோடு ஒளியேற்றி இறந்து போன உயிர்களுக்கு மரியாதை செலுத்தியிருந்தனர். பாரிசில் மே 18 அன்று நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்புப் பேரணியில் தமிழீழ தேசியக்கொடிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை வேதனைக்கானதொரு விடயம் என்பதையும், படுகொலைக்குள்ளான மக்களை நினைவுகூருவதற்கும் அவர்களின் அடையாளத்தையும் மறுத்தது ஏற்பாட்டாளர்களுக்கும், பங்கு பற்றிய மக்களுக்கு மிகப்பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றும், உடனடியாக அரசுக்கு தெரியப்படுத்தியதுடன் எழுத்துமூலமான கடிதத்தையும் உள்நாட்டு அமைச்சருக்கும், அமைச்சுக்கும் அனுப்பிவைத்திருந்தார். ( அக்கடிதம் இத்துடன் மக்கள் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது) இதற்காகவும் எப்பொழுதும் தான் தமிழ்மக்களின் அபிலாசைகளுக்காக உதவுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இத்துடன் கடந்த மே 18 (2022) நடைபெற்ற தமிழீழ தேசியக்கொடி மறுப்பு தொடர்பாக Hussier de Justice  ( நீதிமன்ற கண்காணிப்பாளரின் அறிக்கை வழக்கறிஞருக்கும், நீதிமன்றத்துக்கும் சமர்ப்பித்த நிலையில் அடுத்தகட்ட செயற்பாடுகளில் தமிழீழ மக்கள் பேரவை, மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், ஆர்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். படிப்படியாகவே இதற்கான முடிவை எட்டவேண்டும் என்பதே பல ஆர்வலர்களின் நிலைப்பாடகவுள்ளது. சிங்கள தேசம் கடல் கடந்தும் தனது பொய்யான பரப்புரைகளிலும் தமிழ் மக்களின் உணர்வையும், உறுதியையும் சிதைக்கும் செயற்பாட்டில் இன்னும் ஈடுபட்டு வருகின்றது என்பதோடு தமிழ்மக்கள் இதற்கு ஆட்பட்டு விடக்கூடாது என்றும், வாழும் நாடுகளின் சட்டதிட்டங்களை மதித்து அவர்களுக்கு தமிழீழ மக்களின் அபிலாசைகளையும், எதிர்பார்ப்பையும், நீதியையும் பெற்றுக்கொள்ள அரசியல் சனநாயகவழியில் போராடவேண்டும் என்றும் அதற்கு பெரும் பலமாக எம்முடன் இருந்து வரும் பாராளமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள், அரசியல்வாதிகளின் கைகளை பலமாக்க வேண்டும். “முகம் தெரியாதவர்களுடன் பயணிப்பதைவிட முகம் தெரிந்தவர்கள் ’’ பல ஆண்டுகளாக எம்முடன் பயணித்தவர்களுடன் நாமும் பயணிப்பதே இன்றைய காலத்தின் அரசியல் பாதையின் அவசியமாகின்றது. இதனை பிரான்சு வாழ் தமிழ் மக்களும், வாக்களிக்கும் தகுதிகொண்ட இளையவர்களும் புரிந்துகொண்டு தங்கள் எதிர்காலத்தின் சுபீட்சத்தில் பங்காளராகி பங்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊடகப்பிரிவு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here