அரச இலத்திரனியல் ஊடகங்கள் தனிநபர் சார்ந்து செயற்படுவதாக குற்றம் சாட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரச வளங்கள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படவேண்டும் எனவும் கோரியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் அச்சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது சங்கத்தின் தலைவர் உபுல் ஜெயசூரிய, இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் பிரசாரக் கூட்டத்தை அரச இலத்திரனியல் ஊடகம் ஒன்று நேரடியாக ஒளிபரப்புச் செய்திருந்தது. அதேபோன்று ஏனைய அரச இலத்திரனியல் ஊடகங்களும் தனிநபர் சார்ந்து செயற்படுகின்றன. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான வாகனங்கள் பெருமளவில் இக்கூட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்தன. இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் குறித்த விடயங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கு நாம் கொண்டு சென்றிருக்கின்றோம்.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுவதற்காக நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்.