தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்மொழிப் பொதுத்தேர்விற்கு இம்முறை 4808 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுள் இல்-து-பிரான்சின் (Île-de-France) 55 தமிழ்ச்சோலைகளிலும், தனியார் பள்ளிகளிலும் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கும் தனித்தேர்வர்களாக விண்ணப்பித்தோருக்குமான புலன்மொழிவளத் தேர்வுகள் கடந்த மாதம் 14, 15, 22 ஆகிய நாட்களில் சிறப்பாக நடந்தேறின.
அதைவிட நீஸ்(Nice), போசோலை (Beau Soleil), போர்தோ (Bordeaux) , முலூஸ் (Mulhouse), ஸ்ராஸ்பேர்க் (Strasbourg), நெவர் (Nevers), துலுஸ் (Toulouse), தூர்(Tours), ஜியான் (Gien), ரென் (Rennes) ஆகிய தமிழ்ச்சோலைகளில் இருந்து விண்ணப்பித்தோருக்கும் வெளிமாகாணங்களில் இருந்து தனித்தேர்வராக விண்ணப்பித்தோருக்குமான புலன்மொழிவளத் தேர்வு 04-06-2022 இல் நடைபெறவுள்ளது.
வளர்தமிழ் 1 முதல் 12 வரை விண்ணப்பித்த அனைவருக்குமான எழுத்துத் தேர்வு 04-06-2022 இல் நடைபெறவுள்ளது. இல்-து-பிரான்சு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு பாரிசின் புறநகர்ப்பகுதியான ஆர்கைய் (Arcueil)நகரில் அமைந்துள்ள அரச தேர்வு மண்டபத்தில் (Maison des examens) நடைபெறும்.
வெளிமாகாணங்களில் இருந்து விண்ணப்பித்தோருக்கான எழுத்துத்தேர்வு அந்தந்த இடங்களிலுள்ள தமிழ்ச்சோலைகளில் நடைபெறும்.
இந்தத்தேர்வு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் 20வது தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.