நல்லூர்க் கந்தன் தேர்த்திருவிழா இன்று பக்திபூர்வமான முறையில் நடைபெற்றது. இன்று காலை 5.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்று மங்கள வாத்தியங்களுடன் ஆலய உள்வீதி வலம் வந்து 7.15 மணிக்கு திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளினார். நல்லைக்கந்தன் ஆலயத்தின் முன்றலில் அமைந்துள்ள தேர்முட்டியிலிருந்து திருத்தேர் புறப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலயத்தின் திருவீதி உலாவந்து நிலையை வந்தடைந்தது.
திருத்தேர் நிலையை வந்தடைந்ததும் பச்சைசாத்தி சுவாமியை ஆலயத்துக்குள் எழுந்தருளச் செய்து, பிராயச்சித்த அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து விசேட பூஜைகளும் நடைபெற்று. இன்று மாலை 6 மணிக்கு வழமைபோன்று சுவாமியின் திருவீதி உலாவும் நடைபெறும்.
இன்று நடைபெறும் தேர்த்திருவிழாவில் புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் இலங்கையின் நாலா புறத்திலிருந்தும் 6 லட்சத்துக்கும் அதிகமான அடியார்கள் பங்கேற்பரென எதிர்பார்க்கப்பட்டது.
எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாகக் காட்சியளிப்பதால் ஆலயத்துக்கு உட்புகும் அனைத்து வீதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்த் திருவிழா நடைபெறும் நேரத்தில் வெளி ஊர்களிலிருந்து ஆலயத்தை நோக்கிவரும் காவடிகள் மற்றும் பறவைக் காவடிகள் உள்நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதுடன், தேர் நிலைக்கு வந்து சுவாமி ஆலயத்தை சென்றடைந்ததும் காவடிகள் வடக்கு வீதியூடாக கோவில் வளாகத்துக்குள் வர முடியும். குபேரவாசல் கோபுரத்தின் முன்னால் பறவைக் காவடிகள் இறக்கப்படவேண்டும் என்றும் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
அடியார்கள் தமக்கு ஏற்படும் அசௌகரியங்களின்போது கடமையிலிருக்கும் பொலிஸாருக்கு அறிவிக்க முடியும். அதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
பக்தர்கள் போன்ற போர்வையில் திருடர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சிவில் உடையில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நல்லைக்கந்தன் ஆலய சுற்றுப்புறத்தில் சுமார் 150 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் சேவையில் உள்ளனர். அது மாத்திரமன்றி வீதிப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
யாழ் குடாநாட்டிலுள்ள சுமார் 350 பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வெளி மாவட்டங்களிலிருந்தும் மேலதிகமாக 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசேட கடமைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். வர்த்தக நிலையங்கள் வீடுகளின் பாதுகாப்புக்காக விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழாவில் கலந்துகொள்ளவரும் பக்தர்களுக்கான குடிநீர் வசதிகள் மற்றும் மலசலகூட வசதிகளை யாழ் மாநகரசபை மேற் கொண்டிருப்பதாக மாநகரசபையின் ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார். வெளிவீதியில் பல்வேறு இடங்களில் குடிநீர்த் தாங்கிகள் வைக்கப்பட்டிருப்பதுடன், நீர் முடிந்தவுடன் பவுசர்கள் மூலம் நீர் நிரப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும், வெளிவீதியில் உள்ள குப்பை கூளங்களை உடனடியாக அகற்றுவதற்கும், மலசல கூடங்களை சுத்தமாக வைப்பதற்கும் மாநகரசபையின் பணியாட்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து விசேட பேருந்து போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் மற்றும் போக்குவரத்து சபையின் விசேட பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நேற்றையதினம் நடைபெற்ற நல்லூர் கந்தனின் சப்பரத் திருவிழாவில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், நாளையதினம் 25ஆவது திருவிழாவாக தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது. நாளை காலை 7 மணிக்கு உள்வீதியிலுள்ள தீர்த்தக் கேணியில் தீர்த்தத் திருவிழா நடை பெறவிருபடபதுடன். அதனைத் தொடர்ந்து சுவாமி வெளிவீதி வலம் வரும். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும், திங்கட்கிழமை வைரவர் மடையுடன் நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் நிறைவுபெறும்.