பிரான்சின் 95 ஆவது மாவட்டம் வல்து வாஸ் 95 தமிழர் விளையாட்டுக்கழகம் ஆண்டு தோறும் நடாத்தும் இல்லங்களுக்கிடையேயான மெய்வல்லுநர் போட்டி Stade Pierre de Coubertin 95140 Garges Les Gonesse 95140 மைதானத்தில் 26. 05.2022 வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய மெய்வல்நர் போட்டியின் ஆரம்பமாக பொதுச்சுடரினை போட்டிச்செயலாளர். திருமதி. செ. விஐயா அவர்கள் ஏற்றி வைத்திருந்தார். பிரெஞ்சுத் தேசியக்கொடியை கார்கோணேஸ் மாநகர முதல்வர் Benoit JIMENEZ அவர்கள் ஏற்றி வைக்க தமிழீழத்தேசியக்கொடியை தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியக செயற்பாட்டாளர் திரு. அகிலன் அவர்கள் ஏற்றிவைத்திருந்தார்.
தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. ஈகைச்சுடரினை 05.08.1990 ல் வீரச்சாவைத்தழுவிக் கொண்ட இரண்டாம் லெப்ரினன் மாதங்கி அவர்களின் சகோதரி ஏற்றி வைத்திருந்தார். அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து இல்லங்களுக்கான கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டது. அன்பு இல்லம், பாரதி இல்லம், காந்தி இல்லம், குருகுலம் இல்லக்கொடிகள் அதன் பொறுப்பாளர்கள் ஏற்றிவைத்தனர். ஒலிம்பிக் தீபம் வீரர்களால் ஏற்றிவைக்கப்பட்டு மைதானத்தைச்சுற்றி வந்து பெருந்தீயில் சங்கமிக்க வைத்தனர். தொடர்ந்து வீரர்களுக்கான சத்தியப்பிரமாணத்தை செல்வன் நிதர்சன் திருமதி. ச. சர்மிளாவும், நடுவர்களுக்குமான சத்தியப்பிரமாணத்தை திரு. பரா அவர்கள் எடுத்திருந்தனர். பிரதம விருந்தினர் கார்கோணேஸ் முதல்வர் உரையுடன் போட்டிக்கான விடயங்கள் ஆரம்பமாகியது.
தொடர்ந்து மாணவர்களின் அணிநடை இடம் பெற்றன. அணிநடை மரியாதைகளை மாநகர முதல்வர் Benoit JIMENEZ அவர்களும், திரு. அகிலன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்களும், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன் அவர்கள், மெய்வல்லுனர் போட்டிகளின் துணைமேலாளர் திரு. பீலிக்ஸ் அவர்கள், தமிழர் விளையாட்டுக்கழகம் 95 பொறுப்பாளர் திரு. யூட்ஸ் றமேஸ் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். கடந்த வாரங்களில் தெரிவுப்போட்டிகள் நடைபெற்றிருந்தன. இன்று இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. 9 வயது முதல் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்பெண்களுக்கான ஓட்டப்போட்டிகள், குழந்தைகள், சிறுவர்களுக்கான போட்டிகள், பெண்கள் ஆண்களுக்கான வேகநடைப்போட்டிகள், 05 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
95 மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர் பாதுகாப்பு பாராளுமன்ற அமைப்பின் உதவித்தலைவர் திரு. பிரெஞ்செஸ்கோ பொப்பினி அவர்கள் இடைவேளையின் போது கலந்து கொண்டதோடு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கி மதிப்பளித்ததோடு சிற்றுரையும் ஆற்றியிருந்தார். இன்று இவ்வளவு மக்கள் கலந்து கொண்டிருப்பதை பார்த்து மகிழ்வடைவதாகவும், தமிழ் மக்களுக்காக தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதையும் அவர்களின் நட்பையும், திறனையும் தான் நன்கு அறிவேன் என்பதையும் தெரிவித்திருந்தார். தொடர் தான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ் மக்களின் பக்கம் எப்போதும் இருப்பேன் என்றும் தெரிவித்தார்.
மாலை 7.00 மணிவரை போட்டிகள் நடைபெற்றன. மேலாளர்களாக திரு. க. செல்வநாயம், திரு. யே. காணிக்கைநாதன் ,கடமையாற்றினார்கள். அறிவிப்பாளர்களாக செல்வன். கி. பத்மறூபன் செல்வி. ச. சோபிகா ( பிரெஞ்சு மொழியில்) ஆற்றினர்.
சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் ஆற்றியிருந்தார். கோவிட் என்ற கொடிபேரிடரில் உலகமும் எமது மக்களும் மீண்டு வந்திருப்பதும், கடந்த ஆண்டுகளில் நாம் எல்லாத்துறைகளிலும் எவ்வளவு தூரம் நாம் நிமிர்ந்து நின்றோம் என்றும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பேரிடர் எமக்கு ஒன்றும் பெரிதாக அமையாது காரணம் எமது மண்ணில் இவற்றை விட விட உயிர் இழப்பு என்னும் பேரிடர்களைச் சந்தித்தவர்கள் என்றும் ஆகையால் நாம் மனதாலும், உடலாலும், இனத்தாலும் பலமாக இருக்க வேண்டும் என்றும் அதன் ஒரு செயற்பாடாகவே தமிழர் விளையாட்டுக் கழகம் 95 இந்த ஆண்டு முன்னெடுத்த மெய்வல்லுநர் போட்டியும் தமது குழந்தைகளுடன் பங்கு பற்றிய தேச மக்களுக்கும் இவர்களை தயாராக்கிய பயிற்ச்சியாளர்கள், பெற்றோர்கள், ஆர்வலர்களையும் பாராட்டியிருந்தார். இது வரலாற்றின் கடமையென்றும் அரசியல் ரீதியாக எம்மை துன்பத்தை தந்தவர்கள் இன்று துன்பத்தை அனுபவிக்கின்றதொரு நிலைமை வரலாறு எம் கண்முன்னே தந்துநிற்கின்றது என்று இதிலிருந்து மறந்து யாரும் வழிதவறி பயணிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார், எமது குழந்தைகளை சந்ததியை தாய் மண்ணின் பாசத்தோடு, விடுதலை உணர்வோடும் வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் இன்றைய போட்டிகளில் கடமையுணர்வுடன், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நடுவர்கள், உதவிய அனைவரையும் பாராட்டியதோடு வரும் நாட்களில் பெரிய அளவில் நடைபெறவுள்ள தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் இல்லங்களுக்கிடையேயான மெய்வல்லுநனர் போட்டியிலும், மாவீரர் நினைவு சுமந்த போட்டியிலும் 95 மாவட்டத்திலிருந்தும் பெரும் வீரர்கள் பங்கு கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
வெற்றி பெற்ற வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் பிரதம விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
Adioint Marie Madame MORGADO Déléguée aux Associations, Monsieur Mustapha MOKHTARI , Madame Berard GUNOT, Monsieur Francisque DONGAL ஆகியோர் கலந்து கொண்டனர்; வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிகிண்ணங்கள் வழங்கி மதிப்பளித்தனர். இவர்களுடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிதிப்பொறுப்பாளர் திரு செவ்வேள், மெய்வல்லுநனர் போட்டி முகாமையாளர் திரு. ராஐலிங்கம், தமிழ்ச்சோலை தலைமைப்பணியக செயற்பாட்டாளர் திரு. அகிலன், 95 தமிழர் விளையாட்டுக்கழக போட்டிச் செயலாளர், மேலாளர் திரு. காணிக்கைநாதன், 95 தமிழர் விளையாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு. யூட்ஸ் றமேஸ் அவர்கள், உதவியாக கடமையாற்றிய திருமதி. பிறேமிளா போன்றோரும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி மதிப்பளித்தனர். 9.00 மணியளவில் முறையே கழகக்கொடிகள் அதன் பொறுப்பாளர்களால் இறக்கி வைக்கப்பட தேசியக்கொடிகள் இறக்கி வைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் பாடல் இசைக்கவிடப்பட்டு “தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்” என்ற தாரகமந்திரம் உச்சரித்து நிறைவுகண்டது.