புத்தளத்தில் கடும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
81

நேற்றைய தினம் (24-05-2022) செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 5 ஆயிரத்து 791 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படவில்லை எனவும்,

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தத்தமது வீடுகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று நடைபெற்று வரும் சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 600 மாணவர்கள் பரீட்சை எழுதுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இருப்பினும், அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு எவ்வித தடங்கலுமின்றி பரீட்சையில் தோற்றுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அல்காசிமி சிட்டி மற்றும் பாலாவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் வெள்ள நீர் புகுந்தமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சாஹிரா தேசியப் பாடசாலை, புத்தளம் சென். ஆன்ட்ரூஸ் மத்திய கல்லூரி மற்றும் புத்தளம் இந்து மத்தியக் கல்லூரி என்பனவும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிந்தது.

இதனால், மேற்குறிப்பிட்ட மூன்று பாடசாலைகளிலும் கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்ற வருகை தந்த மாணவ மாணவிகள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.

திட்டமிட்டபடி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த பரீட்சைகள், தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக 9.45 மணிக்கே ஆரம்பமாகியுள்ளதாக மாணவர்கள் குறிப்பிட்டனர்.

புத்தளம் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர், பெற்றோர்கள் ஆகியோருடன் முப்படையினரும் கூட்டாக இணைந்து வெள்ளநீரில் இருந்து இயந்திர படகு சேவை மூலம் மாணவர்களை பாதுகாப்பாக கீழ் மாடி வகுப்பறையிலிருந்து மேல்மாடி வகுப்பறைக்கு அழைத்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here