காலை 10.40 மணியளவில் உச்ச நீதிமன்றம் என்னை விடுதலை செய்ய உத்தரவிட்டபோது, நான் ஒரு நண்பருடன் எனது மாமா வீட்டிற்கு அருகிலுள்ள பொது மண்டபத்தில் காத்திருந்தேன். நிச்சயமாக, நான் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருந்தேன். இறுதியாக செய்தி வந்ததும், நான் வீட்டிற்கு சென்றேன். இத்தனை வருடங்கள் எனக்காகப் போராடிய என் அம்மா (அற்புதம்மாள்) அழுது கொண்டிருந்தார். என் மூத்த சகோதரியும் இருந்தார். சொல்லப்போனால் அம்மா இவ்வளவு அழுவதை நான் பார்த்ததே இல்லை. அம்மாவை அமைதிப்படுத்த நான் போராட வேண்டியிருந்தது. சற்றுத் தாமதமாக வீட்டை அடைந்த என் தங்கையும், தமிழ் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற என் தந்தையும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
என் அம்மா இன்று என்னிடம் பேசவில்லை, அழுது கொண்டே இருந்தார். நான் அவரை ஆறுதல்படுத்த முயற்சித்தேனா என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால், நான் அம்மாவுடன் அமர்ந்து அவரிடம் பேச வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவு வந்து சில மணி நேரங்களே ஆகின்றன. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து வந்த பல அழைப்புகளுக்கு பதிலளித்தப் பிறகு நான் மிகவும் சோர்வாக உணர்கிறேன்.
என்னால் இப்போது எதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை, ஒரு சில பெயர்களைத் தவிர, நான் உயிருடன் இருக்க விரும்பிய, அல்லது இந்த நேரத்தில் என்னுடன் இருக்க விரும்பிய பலரை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை.
இது எனக்கு நீண்ட சட்டப் போராட்டம். ஆனால் என் அம்மா எனக்காக எவ்வளவு போராடுகிறார் என்பதை அறிந்ததால் நான் சோர்வடையவில்லை. நான் தனிமைச் சிறையில் 6×9 அடி அறைக்குள் சுமார் 11 ஆண்டுகள் கழித்தேன். அந்த நாட்களில் தான் நான் என் புலன்களைப் பற்றி அறிய ஆரம்பித்தேன். உண்மையில் என் புலன்கள் குறைந்து கொண்டே வந்தன. நான் பார்ப்பதற்கு வெறுமையான சுவர்களைத் தவிர வேறு எதுவும் இல்லாத அறை. நான் சுவரில் உள்ள செங்கற்களை எப்படி வெறித்தனமாக எண்ணுவேன், கதவு மற்றும் போல்ட்களை எவ்வாறு அளவிடுவேன் மற்றும் நான் விரும்பும் வாசனையை எப்படி கற்பனை செய்வேன் என்று முன்பு ஒருவரிடம் சொல்லியிருந்தேன்.
சிறையில் குழந்தைகளைப் பார்க்க ஆசைப்பட்ட நாட்கள் உண்டு. மேலும் எனது சிறைவாசத்தின் தொடக்கத்தில் எங்கள் வீட்டில் பிறந்த அனைத்து குழந்தைகளும் இப்போது பெரியவர்களாகிவிட்டனர். என் சகோதரியின் டீன் ஏஜ் மகள் செஞ்சோலை இப்போது என்னுடன் இருக்கிறாள். அவள் மிகவும் வெளிப்படையாக இருந்தாள். நான் அவளுக்கு ஒரு விருந்து கொடுக்க வேண்டும், அவளுக்கு இனிப்புகளை வழங்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். அதற்கான ஏற்பாடுகளை நான் இன்னும் செய்யவில்லை. என் சகோதரிகளின் குழந்தைகளான அகரன் மற்றும் இனிமையை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். அகரன் அமெரிக்காவில் இருக்கிறார், இனிமை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் இருக்கும் செல்வா அண்ணாவை (செல்வராஜ்) மிஸ் செய்கிறேன். மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல அம்மாவுக்கு உதவிய ஒரு தன்னலமற்ற நபர் அவர். டெல்லியில் என்னுடன் போராட்டத்தில் ஈடுபட்ட எனது வழக்கறிஞர் எஸ் பிரபு ராமசுப்ரமணியனை நான் மிஸ் பண்ணுகிறேன். நான் அவரை இன்று சென்னைக்கு வரச் சொன்னேன், ஆனால் அவருக்கு இன்னும் பல போராட்டங்கள் உள்ளன.
இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட எனது நண்பரும் சகோதரருமான சேகர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். 1999 இல் அவர் விடுவிக்கப்பட்டபோது அவர் எனக்கு வழங்கிய பரிசை நினைவுபடுத்தும் போது நான் அவரை மிஸ் பண்ணுகிறேன். அவர் விடுதலையானபோது, அவரது காலணிகள், ஒரு சட்டை மற்றும் ஒரு ஜோடி கால்சட்டை ஆகியவற்றை எனக்கு பரிசாக கொடுத்து, நான் விடுவிக்கப்படும் நாளில் அவற்றை அணிய வேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தினார். எனக்கு இப்போது 50 வயதாகிறது, அந்த ஆடைகளை விட அதிகமாக வளர்ந்துள்ளேன். ஆனால் நான் இன்னும் அவற்றை பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.
எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்த தேன்மொழி என்ற ஒரு அக்கா, எனது சட்டப்போராட்டச் செலவுக்காகத் தன் தங்கத் தாலியை எனக்கு அனுப்பியதை நான் நினைவுகூர்கிறேன். அவர் பின்னர் புற்றுநோயால் இறந்து விட்டார், அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
1997 ஆம் ஆண்டு சேலம் சிறையில் என்னைச் சந்தித்து “நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” என்ற குறிப்பைப் பகிர்ந்துகொண்ட பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான மறைந்த முகுந்தன் சி மேனனை என்னால் மறக்க முடியாது. அவருடைய வார்த்தைகள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை என்னால் விவரிக்க முடியாது. எனது போராட்டத்தில் தூணாக துணை நின்றவர் நீதியரசர் வி ஆர் கிருஷ்ண ஐயர். பல முறை, சிறையில் இருந்து நான் செய்ய அனுமதிக்கப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான தொலைபேசி அழைப்புகள், நீதிக்கான எனது போராட்டத்தில், என்னை நம்பிய ஒரு சிலரில் ஒருவரான நீதியரசர் அய்யருக்கு மட்டுமே. நீதிபதி ஐயர் மற்றும் 2011-ல் எனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட 20 வயது நிரம்பிய பி செங்கொடி, அவர்களின் புகைப்படங்களுக்கு முன்பாக எனது மரியாதையை செலுத்தினேன்.
”அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்” என திருக்குறள் கூறுகிறது. இதன் பொருள் பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத்தக்கவை.
இதையும் படியுங்கள்: ’எனது போராட்டத்தை மதித்தீர்கள்’; முடிவுக்கு வந்தது பேரறிவாளன் தாயாரின் 31 வருட காத்திருப்பு
இதேபோல், 32 ஆண்டுகளாக நீடித்த எனது வேதனையை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்கள் பச்சாதாபம், பாசம் மற்றும் அக்கறையுடன் பகிர்ந்து கொண்டனர். என் நம்பிக்கை என் அம்மா. புயலால் பாதிக்கப்பட்ட கடல் வழியான கடினமான பயணத்தில் அவரது அற்புதமான முயற்சிகளும் நம்பமுடியாத உறுதியும் உயிர்காக்கும் பலகைகளாக இருந்தன.
அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். நீதிக்காக ஒரு வலிமைமிக்க அமைப்பை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ள அனைவருக்கும் எனது கதை நம்பிக்கை தரும் என நம்புகிறேன்.
எனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் சிறுவயதில் நான் கழித்த அருமையான நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அதற்கும் இன்றும் இடையே ஒரு பெரிய இடைவெளியை நான் காண்கிறேன். நான் இப்போது நடுத்தர வயது மனிதன், மிகவும் முதிர்ச்சியடைந்த மற்றும் வாழ்க்கை அனுபவத்துடன் இருக்கிறேன். நான் எப்படி இடைவெளியைக் குறைக்கப் போகிறேன் என எனக்கு தெரியவில்லை. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நான் விட்டுச் சென்ற சிறிய கூடு அல்ல எனது சொந்த ஊர்.
A G Perarivalan
tamil.indianexpress