கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!!
யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் .
வீரத்தோடு நெஞ்சுநிமிர்த்தி நின்ற எமது இனம் எதிரிக்கு அடிபணியாது முள்ளிவாய்க்கால் மண்ணிலே வித்தாகிப் போனது. 13 ஆண்டுகள் இதயம் கனக்க நாம் மெல்ல மெல்ல எழுகின்றோம்.
எம் உறவுகள் சிந்திய இரத்தம் எம் கண்களில் வழிய சிவந்த விழிகளோடு நாம் நியாயம் கேட்கப் புறப்படுவோம்.கொத்துக் கொத்தாய் குண்டுகள், செத்து செத்து விழுந்தனர் எம் சொந்தங்கள்.
முள்ளிவாய்க்காலில் இறுதி நொடிவரை தமிழீழ மண்ணுக்குள் விதையாகிப் போன வீரமறவர்களுக்கும், சிங்கள பேரினவாத அரசால் கொல்லப்பட்ட மக்களுக்கும் வணக்கம் செலுத்தும் வகையில் யேர்மன் தலைநகர் பேர்லினில் Neukölln மாவட்ட உள்ளூராட்சிக்கு முன்பாக பல சவால்களுக்கு மத்தியிலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திடலில் தமிழின அழிப்பு நினைவு நாள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு, மாவீரர்களுக்கான கல்லறைக்கும் மக்களுக்கான தூபிக்கும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு , சுடர்வணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் தூபி தாயகத்தில் இடித்தழிக்கப்பட்டாலும் மீண்டும் அது உருவாகும் என்பதற்கு அமைவாக இந்த தூபி மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழர்கள் மீது நடைபெற்ற இன அழிப்பிற்கு நீதி கிடைக்கவும் , தமிழ் மக்கள் சுதந்திரமாக தமது தாயகத்தில் , தமிழீழத்தில் வாழவும் தாம் முழுமையான ஆதரவை தெரிவிப்பதாக உறுதியளித்து பலஸ்தீன , குர்திஸ்தான் மற்றும் வெஸ்ட் சகாறா , சர்வதேச இளையோர் பிரதிநிதிகள் , தமிழ் நாட்டு எழுத்தாளர் , என பல பிரதிநிதிகள் சிறப்புரை ஆற்றினார்கள். தொடர்ந்து முள்ளிவாய்க்கால் வலியை எடுத்துரைக்கும் கவிதைகள் , பாடல்களஇடம்பெற்றது.