தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு ஸ்ராஸ்பூர்க் மாநகரில் கவனயீர்ப்பு. முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவுநாள் 18.05.2022 புதன் கிழமை, ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் பி.ப 3.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது.
இந் நிகழ்வில் 100க் கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர். பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படுகொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர்.
சிறீலங்கா அரசினால் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்ற தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தி நீதியைப் பெற்றுத் தரவும் அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரக்கோரியும் உள்ளடங்கிய மனு ஐரோப்பிய ஆலோசனைச் சபையின் பொதுச் செயலரிடம் கையளிக்கப்பட்டதுடன் தற்போதய நிலைமையில் தமிழ் மக்களின் முக்கிய கடமை பற்றியும், தமிழீழத்தில் மக்கள் எழுச்சிகொண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவு கூர்ந்துள்ளதையும், புலம் பெயர்தமிழ் மக்களும், தாயக மக்களும், தமிழக மக்களும் ஒன்றிணைந்து போராடினால் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும் எனவும் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத் தலைவர் திரு.ந. கிருபானந்தன் அவர்கள் உரையாற்றியிருந்தார்.
இந்நிலையில் எமது பட்டறிவுகளின் அடிப்படையில் எமது போராட்டங்களைத் தொடர்ந்தும் நடாத்தி, சிறீலங்கா அரசின் அரசியல் நாடகத்தையும் கபடத்தனத்தையும் தமிழினப்படுகொலையை முன்னெடுக்கும் வெறியையும் உலகறியச்செய்து, தமிழீழ விடுதலைக்கான ஆதரவைத்திரட்டும் வேலைகளைத் துரிதப்படுத்தல் அவசியமாகின்றது.
இன்றுள்ள பூகோள நலன் சார்ந்த அரசியலில் எமது முயற்சிகள் மாத்திரமே எமக்கான விடுதலையைப் பெற்றுத்தரும்.
இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதையும் தமது தலைவிதியினை நிர்ணயிக்கும் பெரும் சக்தியாக தமிழ் மக்களேஇருக்கின்றார்கள் என்பதையும் சர்வதேசம் விளங்கியுள்ளது. இந்த நிலையில் நீதிக்கான நாட்களை எண்ணி எமது வேலைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பினைக் கொண்டவர்களாக உள்ள நாம் மக்கள் சக்தியாகத் திரண்டு, திறக்கின்ற சர்வதேசத்தின் கதவுகளின் வழியாக, சிறீ லங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரசினை அனைத்துலககுற்றவியல் நீதி மன்றத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் எமது போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.
«காலத்திற்கேற்ப வரலாற்று கட்டாயத்திற்கமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை» மற்றும் «நீதியின் அடிப்படையில், மனிததர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும்பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள்» என்ற தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்கூற்றுக்களுக்கமைய இலட்சியத்தில் உறுதி கொண்டு தேசியத்தலைவரின் வழிகாட்டலில் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி அறவழிப்போராட்ங்களையும் அரசியல் சந்திப்புக்களையும் நடத்தி விடுதலையை விரைவு படுத்துவோம்.அறவழிப் போராட்டங்களூடாக நாளாந்தம் எமது வலிகளையும் வேணவாக்களையும் குருதி தோய்ந்த கண்ணீர்களாக சிந்திக்கொண்டிருந்தாலும் அவையனைத்தும் நாளை மலரப் போகும் தமிழீழத்திற்கு உரமாக மாறும். தமிழீழம் மீட்கும் வரை, எம் மக்கள் விடுதலை பெறும் வரை ஓயாது எம் போராட்டம் இலக்கினை நோக்கி நகரும்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”