
இறுதி யுத்தத்தின்போது வன்னிப் பெருநிலப்பரப்பில் கொத்துக்கொத்தாக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) மாலை 6.00 மணிக்கு பொன்னாலையில் இடம்பெற்றது.

இனவிடுதலை யுத்தத்தின்போது, பொன்னாலையில் கடற்றொழிலுக்குச் சென்ற 11 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவிடத்தில், இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

யுத்தத்தின்போது இனப்படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் தாயகத்தின் பல இடங்களிலும் இன்று இடம்பெற்ற நிலையில், பொன்னாலையிலும் மேற்படி நிகழ்வு இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந. பொன்ராசா, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் மு.கோமகன் மற்றும் பொன்னாலை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை பொன்னாலை வரதராஜ பெருமாள் ஆலயத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.