ஐப்பானில் வழமையாக நடப்பதற்கு முன்பாகவே நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபேயின் லிபரல் டெமாக்ரடிக் கட்சி எளிதாக வெற்றிபெரும் என்று ஊடகக் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்கு முன்பு பேசிய, பிரதமர் ஷின்சோ அபே தனது புரட்சிகர பொருளாதாரக் கொள்கைகளை முன்னேடுத்துச் செல்லப் போவதாக உறுதியளித்துள்ளார்.
இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருள் சூழ்ந்த நிலையில் இருந்த ஜப்பான், தற்போது அதிலிருந்து மீண்டுவிட்டதாக கூறியுள்ள பிரதமர் ஷின்சோ அபே, இருந்தும் தான் செய்ய வேண்டிய காரியங்கள் அதிகமிருப்பதாகத் தெரிவித்தார்.
தன்னுடைய பொருளாதார சீ்ர்திருத்தக் கொள்கைகளை முன்னேடுத்துச்செல்ல மக்கள் ஆதரவு அளித்துள்ளதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் வழக்கத்துக்கும் குறைவானவர்களே வாக்களித்தனர். அபேயின் பொருளாதாரக் கொள்கைகள் இதுவரை வெற்றிபெறாத நிலையில், அவருக்கு வாக்களித்த மக்களிடம் தயக்கம் உள்ளதாக நோக்கர்கள் கூறுகின்றனர்.
அதே சமயம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த தற்போதைய எதிர்கட்சிக்கு எதிரான உணர்வுகளும் குறையவில்லை.
ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு ஜப்பான். இருந்தும் அது பல ஆண்டுகளாக பொருளாதார சுருக்கத்தால் பிரச்சனைகளை சந்தித்துள்ளது.
பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல, அரசு செலவுகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளையும், கூடுதலான பணத்தை பொருளாதாரத்தில் செலுத்தும் நடவடிக்கைகளையும் பிரதமர் ஷின்சோ அபே எடுத்துவந்தார்.