யாழ்ப்பாணம், நல்லூர் முடமாவடியில் நேற்று (17) இரவு நடந்த கோரவிபத்தில் 4 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளிகள் தீப்பற்றி எரிந்தன.
சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்,
தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், தீ அணைப்புப் பிரிவினரின் உதவி பெறப்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்த மேலும் இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ரொபின்சன் – சார்லஸ் (வயது-25), மகேந்திரன் – மகிந்தன் (வயது-25), யோகநாதன் – மேர்வின் டினுஜன் (வயது-17) மற்றும் மயூரன் ஆகிய நால்வர் உயிரிழந்துள்ள நிலையில் நிசாந்தன் என்பவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
உந்துருளிகள் பெட்ரோல் டாங்கில் முழுமையான அளவு பெற்றோல் இருந்ததால் தான் வேகமாக தீப்பற்றி இருக்கும் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்,
இந்த விபத்துத் தொடர்பாக யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.