பிரான்சு பரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான கார்ஜ் சார்சல் பகுதியில் மாவீரர் லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவு தினமான இன்று 17.05.2022 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 18.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று கார்ஜ் சார்சல் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. பிரெஞ்சுத் தேசியக்கொடி, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெற்றது.
லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் நினைவுத் தூபிக்கு முன்பாக மலர்வணக்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சுவா புப்போனி அவர்களும் மேற்கொண்டிருந்த அதேவேளை நினைவுரையையும் வழங்கியிருந்தார்.
பின்னர் தனது முகநூலில் இது தொடர்பாகத் தெரிவித்த விடயம் வருமாறு:-
1982ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள் இலங்கையில் முதல் தமிழ்த் தியாகி லெப்டினன்ட் சங்கர் அவர்களின் நினைவாகவும், தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய போராளிகளுக்காகவும் அஞ்சலி செலுத்தும் நினைவேந்தலில் மே 17ஆம் திகதி கலந்துகொண்டேன். பேரவையில் தமிழ் மக்கள் ஆய்வுக்குழுவின் உப தலைவர் என்ற வகையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த இனப்படுகொலை தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டேன். 1983 முதல் 2009 வரை நீடித்த இந்தப் போர் உண்மையில் முடிவடையவில்லை, அது தொடர்கிறது, குற்றங்கள் இனியும் தொடரக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.