தமிழின அழிப்பு உச்ச நாள் மே 18 ன் 13 ஆம் ஆண்டின் நினைவேந்தலும், கவனயீர்ப்பு நிகழ்வும் பிரான்சு 78 மாவட்டமாகிய வெர்சாய் என்னும் பிரதேசத்தில் நேற்று 16.05.2022 திங்கட் கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணிவரை மாநகரசபை மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றது.
அங்கு வாழும் மக்களுடன் பயணிக்கும் பிராங்கோ தமிழ்ச்சங்கம் வெர்சாய் ஒழுங்கு செய்திருந்து.
நினைவேந்தல் நிகழ்வில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க, மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர் வணக்கம் செலுத்தி அகவணக்கமும் செய்தனர்.
தொடர்ந்து மக்கள், குழந்தைகள், இளையவர்கள் தமிழினப் படுகொலை நிழற்படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினர். நினைவுரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் ஆற்ற, அவரைத் தொடர்ந்து தேசவிடுதலைப்பற்றாளர் உரையாற்றினார். பல பிரெஞ்சு மக்கள் தமிழர் மனிதவுரிமைகள் சங்கத்தால் வைக்கப்பட்ட தமிழினப்படுகொலை நிழற்படங்களை பார்வையிட்டதோடு, விபரங்களையும் ஆர்வத்துடன் அறிந்து கொண்டனர். இவர்களுக்கான விளக்கங்களை அங்கு வாழும் எமது இளையவர்கள் விளங்கப்படுத்தினர்.
முதற்தடவையாக இங்கு மாநகரசபையின் அனுமதி பெறப்பட்டு இக்கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. பாடசாலை, வேலைநாட்களாக இருந்தாலும் பல மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் வெர்சய் பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர் உரையாற்றி இக்கவனயீர்ப்புப் போராட்டத்தின் அவசியம் பற்றியும், புதன்கிழமை பாரிசு றீப்பப்ளிக்கிலிருந்து,பஸ்ரில் நோக்கிய பேரணி பற்றியும் அதிலும் எமது மக்கள் கலந்துகொண்டு எமது தேவையை, அபிலாசையை சர்வதேசத்திற்கு தெரிவிக்கவேண்டும் என்றும் கூறினார். “தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்” என்ற தாரக மந்திரத்தை உச்சரித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நிறைவுபெற்றது.
ஊடகப்பிரிவு