மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுத்த இறுதி யுத்தத்தின்போது படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் நினைவேந்தல் வாரத்தில், பொன்னாலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பொன்னாலையில் உள்ள பொது அமைப்புக்கள் இணைந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்தன.
இறுதி யுத்தத்தின்போது, வன்னியில் சிக்கியிருந்த பொதுமக்களுக்கு அரசாங்கம் உணவுப் பொருட்களை அனுப்பியிருக்காமையால் மக்கள் பட்டினிச் சாவிற்கு தள்ளப்பட்டனர்.
எனினும், அங்கிருந்த சமூகத் தொண்டர்கள் கிடைத்த சொற்ப அரியைப் பயன்படுத்தி கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கினர். இதன்மூலமே இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில், உரிமைக்கான விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு முன்பாக இன்று கஞ்சி காய்ச்சப்பட்டது.
ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் ஆர்வத்துடன் பங்குபற்றி கஞ்சியை பருகிச் சென்றனர்.