தமிழ் மக்கள் தற்போது ஒன்றுபட வேண்டிய காலம் இது : கஜேந்திரன் எம்.பி.அழைப்பு!

0
183

சிங்கள – பௌத்த பேரினவாதம் பலவீனம் அடைந்துள்ளது. தமிழ் மக்கள் தற்போது ஒன்றுபட வேண்டிய காலம் இது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் எம். பி. தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – நல்லூரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை ஆவண காட்சிப்படுத்தலை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விடுதலைப் பயணத்தில் உயிர்நீத்த ஆன்மாக்கள், மாவீரர்களின் தியாகங்கள் வீண் போகவில்லை என்பது இன்று தென்னிலங்கையில் நடைபெறுகின்ற சம்பவங்களின் மூலம் நம்பிக்கை கொள்ளக் கூடியதாகவுள்ளது. எங்கள்மீது இனப்படுகொலை செய்த ராஜபக்ஷ சொந்த மக்களாலேயே துரோகி, கள்ளன், கொலைகாரன் என்று தூற்றப்பட்டு பதவியிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் கண்முன்னே நடக்கிறது.

கோட்டாபய ராஜபக்ஷவும் விரைவிலேயே வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதே எமது விருப்பம். அவர் வீட்டுக்குச் செல்வது மட்டுமல்ல அவர் மேற்கொண்ட இனப்படுகொலைக்காக சர்வதேச சட்டங்களின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் இது. சிங்கள – பௌத்த பேரினவாதம் பலவீனமடைந்திருக்கின்றது. தங்களுக்குள் மோதிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து வெளியே வந்து, ஒற்றையாட்சியை நிராகரிக்க வேண்டும்.

ஒரு தீர்வுக்காக ஒன்றுபட்டு இந்தியாவின் கூலிகளாக இருக்கின்ற தமிழ் தலைமைகள் இந்தியாவுக்காக 13வது திருத்தச் சட்டத்தை முன்னெடுக்காது கை விட்டு ஒதுங்க வேண்டும். தமிழ் மக்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கரத்தை பலப்படுத்தி சர்வதேச நீதியை பெற்றுக் கொள்வதற்கும் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here