இலங்கையில் இன்றும் தொடரும் கலவரங்களில் இதுவரை 7 பேர் உயிழந்ததுடன் பல நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்ததுடன் மகிந்தராஜபக்சா மற்றும் ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரின் 30 இற்கு மேற்பட்ட வீடுகள், அலுவலகங்கள், உடமைகள் தீக்கிரையாகியுள்ளன.
இமதூவ பிரதேச சபையின் தவிசாளர்ஏ.வி. சரத் குமார, அவரது இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தை தொடர்ந்து பிரதேச சபைத் தலைவர் ஏ.வி. சரத் குமார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் நேற்றைய தினம் (09) முதல் இடம்பெற்று வரும் அமைதியின்மை காரணமாக இதுவரை SLPP பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உள்ளிட்ட 7 பேர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவங்களில் 200 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, நேற்றிரவு அலரி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கண்ணீர் புகை துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
24 வயதான குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றையதினம் (10) அலரி மாளிகைக்கு வந்த ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் திட்டமிட்டு தூண்டப்பட்டு, அமைதியாக இடம்பெற்று வந்த ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ போராட்டக் களத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக, நாடு முழுவதும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்த பொதுமக்களால் இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சம்பவத்தில் சுமார் 30 எம்.பிக்களின் வீடுகள் அவர்களது சொத்துகள், வாகனங்கள் உள்ளிட்டவை எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய ‘கோட்டா கோ கம’ போராட்டக் கள தாக்குதலைத் தொடர்ந்து அதற்காக வந்த சிலரை பொதுமக்கள் தடுத்து வைத்து மேற்கொண்ட விசாரணைகளில், தாங்கள் சிறைக்கைதிகள் என அவர்களால் தெரிவிக்கப்படும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘கோட்டா கோ கம’, ‘மைனா கோ கம’ தாக்குதல் விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.