
அது சிறையல்ல வதை முகாம். நிலத்துக்கு அடியிலேயே அது அமைந்துள்ளது.
நான் உள்ளிட்ட எனது குழு மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலேயே அங்கு சென்றோம். அதற்குள் கொடிய விஷப்பாம்புகள் இருந்தன.
ஆயிரக்கணக்கான வௌவால்கள் இருந்தன.
உள்ளே செல்ல முடியவில்லை.
ஒரு வகையான வாயு வெளிவந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் இருப்பது ஒரே ஒரு மலசலகூடம்.
அது வர்த்தமானிப்படுத்தப்பட்ட சிறையும் அல்ல. மனிதன் ஒருவனை தடுத்து வைக்க எந்த வகையிலும் பொருத்தமற்றது.
கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் நெருங்கிய சகாவான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மற்றும் ரியல் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க ஆகியோரின் துணையுடன் இலங்கை கடற்படையால் திருகோணமலை கடற்படை தளத்தின் ‘ கன்சைட்’ வதை முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கொழும்பை சேர்ந்த 11 தமிழ் மாணவர்கள் தொடர்பான வழக்கில்
முன்னாள் விசாரணை அதிகாரி நிஸாந்த டீ சில்வா அவர்கள் மேற்குறித்த மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்த திருகோணமலை கடற்படை தளத்தின் ‘ கன்சைட்’ வதை முகாம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் வழங்கிய சாட்சியத்தில் மேற்கண்டவாறு பதிவு செய்து இருந்தார்
மேற்குறித்த வதைமுகாம் அமைத்துள்ள திருகோணமலை கடற்படை தளத்தில் தான் தற்போது ராஜபக்சே குடும்பம் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டு இருக்கின்றது
குறித்த 11 தமிழ் மாணவர்களும் இலங்கை கடற்படையை சேர்ந்த லெப்டினன்ட் கொமாண்டர்களான சம்பத் முனசிங்க, ஹெட்டி ஆரச்சி ஆகியோர் தலைமையிலான கடற்படை குழுவினரால் கடத்தப்பட்டு, கோட்டை சைத்திய வீதியில் உள்ள ‘ பிட்டு பம்பு’ எனும் இரகசிய தடுப்பு அறையிலும் பின்னர் திருகோணமலை கடற்படை முகாமின் ‘கன்சைட்’ என்ற இரகசிய நிலத்தடி வதை முகாமிலும் தடுத்து வைக்கப்பட்ட விவகாரம் போதிய சாட்சியங்களுடன் நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தபட்டு இருந்தது.
அதே போல குறித்த மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்த திருகோணமலை தடுப்பு முகாமிற்க்கான பொறுப்பதிகாரியாக இருந்த ஆர் எஸ் பி இரணசிங்கே அவர்களுடன் கோத்தபாயா ராஜபக்சே தொடர்பில் இருந்தார் என்பதையும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்கிற அமைப்பு உறுதிப்படுத்தி இருந்தது.
இது தவிர கிழக்கு மாகாண கட்டளை அதிகாரியாக இருந்த எஸ் எம் பி வீரசேகர , பிரதி கட்டளை அதிகாரியாக இருந்த சிசிர ஜெயக்கொடி போன்றவர்களுடன் கோத்தபாயா ராஜபக்ஷே அவர்களும் கடத்தப்பட்ட மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தடுப்பு முகாமிற்கு செல்வதற்கான அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள் என்பதும் சர்வதேச அமைப்புகளால் அம்பலப்படுத்தப்பட்டு இருந்தது.
2009 மே 21 ம் திகதி கடத்தப்பட்ட மாணவர்களில் ஒருவரான ராஜீவ் நாகநாதன் கொல்லப்படுவதற்கு முன்னர் தனது தாய் சரோஜினி நாகநாதன் அவர்களோடு திருகோணமலை கடற்படை முகாமில் தடுப்பு காவலில் இருந்தவாறு தொலைபேசி வழியே பேசி இருந்தார்.
குறித்த தடுப்பு முகாமில் மிகவும் பயங்கரமான சம்பவங்கள் இடம்பெறுவதாக தனது மகன் தெரிவித்ததாக சரோஜினி வாக்கு மூலம் வழங்கி இருந்தார்.
அதே போன்று 18 முதல் 20 வயதுடைய இளைஞர்களையும் யுவதிகளையும் திருகோணமலை தடுப்பு முகாமில் வைத்து சுட்டுக்கொலை செய்கின்றனர் என்பதையும் மகன் தனது தாயிடம் சொல்லி இருந்தார்.
குறித்த தொலைபேசி வழி உரையாடலின் பொது எனது மகன் மிகுந்த அச்சத்திலிருந்தான் என்பதையும் தாய் சரோஜினி நாகநாதன் நீதிமன்றங்களிடம் முறைப்பாடு செய்து இருந்தார்.
அது மட்டுமின்றி தனது மகன் கழிவறைக்கு அழைத்து செல்லப்பட்டவேளை இரத்தக்கறைகளையும் பெருமளவு இரத்தங்களையும் கண்டுள்ளான் தனக்கும் அந்த கதி ஏற்படுமோ என அவன் அச்சம் கொண்டிருந்தான் என அம்மா சரோஜினி நாகநாதன் சொல்லி இருந்தார்
இவ்வாறு குறித்த வழக்கு தொடர்பான சகல சான்றுகளும் கிடைத்த பின்னரும் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் பெற்று கொடுக்க இலங்கை நீதித்துறை தயாராக இருக்கவில்லை .
மைத்திரிபால சிறிசேனா மற்றும் ரணில் விக்கிரமசிங்கே ஆட்சிக்காலத்தில் 7குறித்த வழக்கின் பிரதான சூத்திரதாரியான வசந்த கரன்னகொட அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி இருந்தார்கள்
கோட்டாபய ராஜபக்சே நிருவாகம் வசந்த கரன்னகொட மீதான குற்றசாட்டை விலக்கி வழக்கில் இருந்து விடுதலை செய்து இருந்தது
மேற்குறித்த சம்பவம் உட்பட பல சந்தர்ப்பங்களின் கடத்தப்பட்ட தமிழ் இளையவர்கள் தடுத்துவைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கடற்படை தளத்திலேயே ராஜபக்சே குடும்பமும் தஞ்சம் அடைந்து இருக்கின்றது.
இனமொன்றின் குரல்.