ஈழத் தமிழர்களுக்குத் தேவை சோறு அல்ல. விடுதலைப் பெற்ற தாய்நாடு. முதலமைச்சர் தனது நிலைபாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வ. கௌதமன்
2009 முள்ளிவாய்க்கால் மண்ணில் உலகம் இதுவரை கண்டிராத, உலகத்தால் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், இரசாயனக் குண்டுகளையும், பிஞ்சுப் பிள்ளைகள், பெண்கள் வயோதிகர்கள் என வித்தியாசம் பார்க்காமல் வீசி, இரத்த சகதியிலாழ்த்திய ராஜபக்சே, கோத்தபயாவின் குரூர கூட்டத்திற்கு உலகத்தாரோடு போட்டி போட்டுக்கொண்டு தமிழ்நாடு அரசும் பொருளாதார உதவி செய்வதென்பது, கடும் கண்டனத்திற்குரியது. ஈழத்தமிழர்களுக்கு தேவை சோறு அல்ல, விடுதலைப் பெற்ற தாய் நாடு என்பதனை உறுதிசெய்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தீர்மானம் இயற்ற வேண்டும் எனவும், இலங்கை மக்களுக்காக பொருளாதார உதவி செய்வதென்பது ஒரு போதும் அங்கு வாழும் ஈழத் தமிழர்களுக்கு அது போய் சேராது என்கிற பேருண்மையையும், உணர்ந்து தனது நிலைப்பாட்டினை மறு மறுபரிசீலனை செய்யும்படி, தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
2000 இந்து கோயில்களை இடித்த வெறிபிடித்த ராஜபக்சே கூட்டத்திற்கு இந்தியாவும், இறுதி யுத்தத்தை நிறுத்தும்படி துள்ளத் துடிக்க 20க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள், தலையில் எண்ணெயை ஊற்றிக் கொண்டு எரிந்து கரிந்து சாம்பலானதோடு மட்டுமல்லாமல், இதுவரை மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கைக்கு தமிழ்நாடு அரசும் உதவி செய்கிறது என்றால், இதற்குப் பெயர் ஈரம் என்று ஒரு போதும் எடுத்துக்கொள்ள முடியாது. சுனாமி காலகட்டத்திலேயே உலக நாடுகள் கொடுத்த நிதியினை மூன்று பங்கு நீரால் சூழப்பட்டு பேரழிவில் பெருமளவில் சிக்கிய ஈழத்தமிழர்களுக்கு செலவழிக்காத சிங்களக் கூட்டமா, இப்பொழுது நீங்கள் கொடுக்கின்ற பொருளாதாரத்தில் உதவி செய்யப் போகிறது? தமிழ்நாட்டிலிருந்தும் கொடுக்கிற பணத்தில், அந்தக் கொலைகார கூட்டம் தங்களது கட்டமைப்பை மீளெழுப்பி மீண்டும் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்து, இந்து கோயில்களை அடித்து நொறுக்கி தமிழ் ஈழத் தமிழர்களை கொன்று புதைத்து, கோரத்தாண்டவம் ஆடுமே தவிர, ஒரு போதும் அது அறம் காக்காது. மாறாக 2009ல் திமுகவின் மீது ஏற்பட்ட கறையை விடவும் மீண்டும் பிரம்மாண்டமான இன்னொரு கறையை சுமக்க வேண்டி வரும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன். இடையில் வேறு காமாட்சி என்கிற ஒரு கோமாளி எங்களின் வாரிசுகள்தான் சிங்களர்கள் என்றும், எங்களின் உறவினர்தான் இப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் என்றும், பினாத்தி கொண்டிருப்பது தமிழர்களுக்குள் உங்களைப் பற்றிய மாபெரும் உறவுச் சிக்கலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் தாங்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை, சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், தனித்தமிழீழமே ஒரே தீர்வு என தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் நீங்கள் இலங்கைக்கு பொருளாதார உதவி செய்வதாக அறிவித்து, அதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே நன்றி சொல்லி தமிழில் கடிதம் எழுதுவதென்பதெல்லாம் தமிழினம் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு மாபெரும் தலைக்குனிவு என்பதையும் தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.
முதல்வர் அவர்கள் உடனடியாக தனது நிலைபாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக போரினால் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட எம் தமிழீழ உறவுகள் கொல்லப்பட்டது போக, பல்லாயிரக்கணக்கில் பட்டினி சாவினாலும் செத்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஈரம் கசியாத நாம் இன்று சிங்கள மக்களுக்கும் சேர்த்து உதவ நிற்பதென்பது நேர்மையற்றது. முற்றாக அழிந்த நிலையில் எவ்வகையிலும் மீளமுடியாமல் கிடக்கும் எம் தமிழினத்திற்கு இனியும் எப்பொழுதுதான் நேர்மையோடும், உண்மையோடும் நாம் நிற்கப் போகிறோம்? போரின் போது ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் இதுவரை மீளப் பெறப்படவில்லை. தமிழர் கோயில்கள் இடிக்கப்பட்டு புத்த விகாரைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் இன்றும் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ராணுவ அச்சுறுத்தலில் இருந்து எங்கள் வீட்டுப் பெண்கள் இன்னும் முற்றாக விடுபடவில்லை. யுத்தம் நடந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும், தமிழர்களுக்கென்று ஒரு சிறிய அளவில் கூட விடியல் இல்லை என்றால் உலகம் முழுக்க 12 கோடி தமிழர்கள் வாழ்ந்து என்ன பயன்? தமிழர்களுக்கென்று தமிழ்நாடு அரசொன்று இருந்து என்ன பயன்?
மீண்டும் சொல்கிறேன்.
எம் தமிழீழ மக்களுக்கு தேவை திண்பதற்கு சோறு அல்ல. சுயமரியாதையோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்கான விடுதலை பெற்ற தனித் தமிழீழ நாடு. வலியோடு சேர்ந்த இயல்பரிந்து மே-10 இக்கூட்டத் தொடருக்குள்ளாகவே தீர்மானம் இயற்றி, இந்திய ஒன்றிய அரசுக்கு நெருக்கடிகள் தருவதோடு 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இதற்கான தீர்வை உறுதிசெய்ய வேண்டுமென்றும், இது ஒன்றே நடந்து முடிந்த அனைத்து பேரிழப்புகளுக்கெல்லாம் ஒரே தீர்வாக அமையும் என்றும் உரிமையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வ. கெளதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில் “
06.05. 2022