இது தமிழ்நாட்டிற்கு பேரவமானம்.
ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் இன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இலங்கைக்கு பொருளாதார உதவி செய்வதாக அறிவித்து அதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே நன்றி சொல்லி தமிழில் கடிதம் எழுதுவதென்பதெல்லாம் தமிழினத்திற்கு மாபெரும் தலைகுனிவு.
முதல்வர் அவர்கள் உடனடியாக தனது நிலைபாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக போரினால் மூன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட எம் தமிழீழ உறவுகள் கொல்லப்பட்டது போக பல்லாயிரக்கணக்கில் பட்டினி சாவினாலும் செத்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஈரம் கசியாத தமிழ்நாடு அரசு இன்று சிங்கள மக்களுக்கும் சேர்த்து உதவ நிற்பதென்பது நேர்மையற்றது. இரக்கமற்ற முறையில் கொத்துக் குண்டுகளை வீசி எம் பிஞ்சு பிள்ளைகளையும், எங்கள் வீட்டு பெண்களையும் கதறி சிதற அழித்த கூட்டத்திற்கே உதவுவதென்பது அறமற்றது. முற்றாக அழிந்த நிலையில் எவ்வகையிலும் மீளமுடியாமல் கிடக்கும் எம் தமிழினத்திற்கு இனியும் எப்பொழுதுதான் நேர்மையோடும் உண்மையோடும் நிற்கப் போகிறீர்கள்?
மீண்டும் சொல்கிறோம்.
எம் தமிழீழ மக்களுக்கு தேவை திண்பதற்கு சோறு அல்ல. சுயமரியாதையோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்கான விடுதலை பெற்ற நாடு.
வ. கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில் “
05.05. 2022