காலிமுகத்திடலில் நடைபெறும் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெறும் இடத்தில் இறுதிப் போரின்போது படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் ஒளிப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது.
ஜனாதிபதி, அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி காலிமுகத்திடலில் நடைபெறும் தன்னெழுச்சிப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 25ஆவது நாளாக தொடர்ந்தது. கோட்டா கோ கம என்று பெயரிடப்பட்டு நடைபெறும் இந்தப் போராட்ட களத்திலேயே நேற்று இசைப்பிரியாவின் ஒளிப்படம் தாங்கியவாறு போராட்டம் நடைபெற்றது.
தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும், ஊடகவியலாளராகவும், நிதர்சனம் திரைப்பட பிரிவின் கலைஞராகவும் பரிணமித்தவர் இசைப்பிரியா. இறுதிப் போரின்போது இவர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலைசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.