தமிழகம், பள்ளிக்கரணை பகுதியில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாகக் கூறப்படும் இலங்கை அகதி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சென்னை பள்ளிக்கரணை பகுதியிலுள்ள இலங்கை அகதியொருவர் விசாரணைகளுக்காக கடந்த 2 ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
போலி கடவுச்சீட்டு தொடர்பான விசாரணைகளுக்காகவே குறித்த இலங்கை அகதி பள்ளிக்கரணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த இலங்கை அகதி, பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து, பொலிஸாரினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இலங்கை அகதியான மோகன் உயிரிழந்துள்ளார்.
மோகனின் உயிரிழப்புக்கு பொலிஸாரே காரணம் என தெரிவித்து தமிழகத்தில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மோகனின் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் ஆய்வாளரைப் பணி நீக்கம் செய்து, விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, மோகனின் உயிரிழப்புக்கான முழு பொறுப்பையும் பொலிஸாரே ஏற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் நேற்றைய தினம் நியூஸ்பெஸ்டிற்குக் கூறியிருந்தார்.