02.05.2006 அன்று மாலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த உதயன் பத்திரியை அலுவலகத்தினுள் ரி-56, ஏ.கே 47 மற்றும் கைத்துப்பாக்கிகளுடன் 05 ஆயுததாரிகள் சுவர் ஏறிக்குதித்து உள்நுழைந்துள்ளனர். அவர்களில் நால்வர் முதலில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் அறைக்குச் சென்று துப்பாக்கி முனையில் அவரை நிலத்தில் படுக்கவைத்தனர். நிமிர்ந்தால் சுடுவோம் என்று மிரட்டி விட்டு ஒருவர் அவர் அருகில் நின்றுகொண்டார்.
ஏனைய இரு ஆயுததாரிகளும் சந்தைப்படுத்தல் முகாமையாளரின் அலுவலகத்திற்குச் சென்று எந்தக் கேட்டுக்கேள்வியுமின்றி அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அடுத்து ஆயுததாரிகள் விநியோகப் பகுதிக்குள் சென்றனர். அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரையும் கீழே இருக்குமாறு கூறி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். பின்னர் அவர்களை நிலத்தில் படுக்குமாறு கூறிவிட்டு யாரும் நிமிர்ந்து பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டு மீண்டும் தாறுமாறாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.
அதில் ஊழியர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்ததும் ”ஐயோ” என அவர் எழுப்பிய குரலைக் கேட்டதும் நிமர்ந்து பார்த்த ரஞ்சித்தை நோக்கி ஆயுததாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். காயமடைந்து கீழே விழுந்த அவரின் முதுகில் காலை வைத்து மீண்டும் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதையடுத்து அலுவலகத்தின் ஏனைய அறைகளுக்கும் சென்று அங்கிருந்த கணிணிகள் மற்றும் தளபாடங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவற்றைச் சேதமாக்கிவிட்டு, தாங்கள் வருகைதந்த மோட்டார்சைக்கிள்களில் திரும்பிச் சென்றுவிட்டனர்
03 மோட்டார் சைக்கிளில் 07 ஆயுததாரிகள் வருகை தந்ததாகவும், அவர்களில் இருவர் மோட்டார் சைக்கிளை இயங்குநிலையில் தயாராக வைத்திருந்ததாகவும், ஏனைய ஐவருமே உள்ளே சென்று தாக்குதல் நடாத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆயுததாரிகள் ஐவரும் சரளமாக தமிழ் மொழியில் உரையாடியிருந்தனர். அவர்களில் ஒருவர் தாக்குதல் நடப்பதற்கு சில நிமிடங்கள் முன்னர் அலுவலக முன்றலுக்கு வந்து உதயன் ஆசிரியரை சந்திக்க வேண்டுமென கேட்டதாகவும், அந்த நபரை சிறிலங்கா அரசுடன் சேர்ந்தியங்கிய துணை இராணுவக் குழுவான ஈபிடிபியின் சிறிதர் தியேட்டர் முகாமிலும், ஈபிடிபியின் வாகனங்களிலும் கண்டதாகவும் ஊழியர்கள் சிலர் தெரிவித்திருந்தனர்.
இச்சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் (01.05.2006) வெளியாகிய பத்திரிகையின் கேலிச் சித்திரப்பகுதியில் துணைஇராணுவக் குழுவான ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் பற்றிய ஒரு கேலிச்சித்திரம் வெளியாகியிருந்தது. புலிகள் சமாதானப் பேச்சுவாரத்தைகளை தட்டிக்கழித்தால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் என மகிந்தவின் காலடியில் இருந்து டக்ளஸ் கேட்பது போலவும், அதற்கு ஏற்கனவே சரணடைந்தவர்களுடன் இனி என்ன சமாதானப் பேச்சு, வீரர்களுடன் தான் சமாதானப் பேச்சு வீணர்களுடன் அல்ல என மகிந்த தரப்பிலிருந்து பதிலளிப்பது போலவும் அச்சித்திரம் வரையப்பட்டிருந்தது.
இதனால் இத்தாக்குதலை சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து துணைஇராணுவக்குழுவான ஈபிடிபியே செய்திருக்கிறது என பரவலாக நம்பப்படுகின்றது.
இத்தாக்குதலில் உதயன் பத்திரிகையின் சந்தைப்படுத்தல் முகாமையாளரான பஸ்ரியன் ஜோர்ஜ் சகாயதாஸ் மற்றும் விநியோகப்பகுதி மேற்பார்வையாளரான ரஞ்சித் ஆகியோர் கொல்லப்பட்டனர். ரஞ்சித் திருமணமாகி ஒரு மாதமே ஆகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.