அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண கடற்றொழில் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து அறிவித்தல் விடுத்துள்ளன.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச சம்மேளனம், யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம், வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து நேற்றைய தினம் யாழ். நீரியல் வளத் திணைக்களத்தில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் குறித்த அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளாக,
வடபகுதி மீனவர்களான நாம் குறிப்பாக யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பல இழப்புக்களை சந்தித்து பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்களாகவுள்ளோம்.
எமது வாழ்வாதாரத்தை படிப்படியாக வங்கிக் கடன் மற்றும் மானிய உதவிகள் ஊடாக உயர்த்தி வரும் நிலையில் இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.
இவர்களது இந்த வருகை எமது பொருளாதாரத்தை அழிப்பதோடு நின்றுவிடாது எதிர்காலத்தில் மீன்பிடி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத வகையில் மீன்பிடி உபகரணங்களை அழிப்பது மீன்பெருக்கத்திற்கான நிலப்படுக்கையை அழிப்பது போன்ற அழிவுகளை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக பெறுமதிமிக்க வலைகள் இந்திய இழுவைப் படகுகளின் வருகையால் மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் அழிக்கப்படுகிறது. இதனால் எமது தொழில் நடவடிக்கை பாதிப்படைகின்றது.
இத்தகைய நிலையில் மீன்பிடி உபகரணங்களை கொள்வனவு செய்ய வங்கிகளில் பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாத நிலையும் குடும்பப் பொருளாதாரத்தை மீளமைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு மகஜர் ஊடாகவும் கவனயீர்ப்பு மூலமாகவும் பல தடவைகள் தெரியப்படுத்தியிருந்தோம். அடுத்த படியாக பேச்சுவார்த்தைகளின் ஊடாகவும் தெரியப்படுத்தியிருந்தோம். எனினும் இதுவரையில் உரிய தீர்வு எட்டப்படவில்லை.
இத்தகைய நிலையிலேயே வடபகுதி மீனவர்களாகிய நாம் அத்துமீறும் மீன்பிடி நடவடிக்கையைக் கட்டுப்படுத்தக் கோரி தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
எமது போராட்டங்கள் மாவட்டங்கள், பிரதேசங்கள் என முன்னெடுக்கப்படவுள் ளன. குறிப்பாக முதலமைச்சர் அலுவலகம், இந்தியத் துணைத்தூதரகம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் முன்பாக இடம்பெறவுள்ளத என குறிப் பிடப்பட்டுள்ளது.