போரின் தாக்கத்தினால் இன்றுவரை எமது பொருளாதார கட்டமைப்பு பாதிப்படைந்துள்ளது. மிகக் கூடுதலான அளவில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட படிக்கும் பிள்ளைகள் உள்ள குடும்பங்கள் அதிகமான பொருளாதாரக் கஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றன என வடக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார்.
நல்லூர் ஜே. 109 கிராம அலுவலர் பிரிவிலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த முப்பது குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் வழங்கும் நிகழ்வு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
வடக்கு கால் நடை அபிவிருத்தித் திணைக்கள ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு கால் நடை அபிவிருத்தி அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மேலும் தெரிவித்ததாவது,
இந்தத் திட்டத்திற்கான நிதி அரசினது அல்ல. புலம்பெயர்ந்து வாழும் நண்பரின் தனிப்பட்ட நிதியினூடாக இந்த ஆடுகள் வழங்கப்படுகின்றன.
ஏழைகளின் பசு என்று ஆடுகளைக் கூறுவதுண்டு. அதைப் பராமரித்துக் கொள்ள பெரும் செலவு ஏற்படாது. சாதாரண மக்களும் ஆடுகளை கடினமின்றி வளர்த்துக் கொள்ளமுடியும்.
மன அழுத்தங்களிலிருந்து விடுபட பிராணிகளை வளர்க்கவேண்டும். இன்று பிள்ளைகள் திசைமாறிச் செல்வதிலிருந்து அவர்களைத் தடுப்பதற்கு செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பது பயனுள்ளதாகும்.
பிள்ளைகளுக்கு ஏற்படும் மன அழுத்தங்களிலிருந்து விடுபட அவை உதவும். இதனால் தான் சின்னப்பிள்ளைகள் உள்ள குடும்பங்களைத் தெரிவு செய்துள்ளோம்.
இன்று உங்களுக்கு உதவுவதற்காக ஆடுகளை வழங்கிய நண்பர் ஏற்கனவே பல உதவிகளை வழங்கியுள்ளபோதும் தன்னை இனங்காட்டிக் கொள்ளவிரும்பாதவராகவே உள்ளார். அவரது இந்த உதவி உங்களது வாழ்க்கையை வளப்படுத்தும் வகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது உங்களது பொறுப்பாகும். உங்களிடம் நேரில் வந்து எமது உத்தியோகத்தர்கள் நிலைமைகளைத் தெரிந்து கொள்வதுடன் தேவையான உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளனர். எமது மக்களின் போராட்டத்தை புலம்பெயர்ந்த மக்கள் தாங்குவதுபோல் பொருளாதார ரீதியான விடயத்திலும் உதவ முன்வரவேண்டும் என்றார்.