கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் தஞ்சமடைந்தோர் முகாமிலிருந்து 1990ஆம் ஆண்டு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட 158 பேரைத் தேடித்தருமாறு வலியுறுத்தி இன்று அதே இடத்தில் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுவோரின் உறவினர்களினால் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமிலிருந்த 158 பேரை 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி இராணுவத்தினர் அழைத்துச் சென்றதாக இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
எனினும், இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இன்று வரை மீண்டும் வரவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீரவிடம் வினவியபோது,
வந்தாறுமூலை முகாமில் 1990 ஆம் ஆண்டு இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டார்.