ஒட்டுமொத்த மக்களையும் பொருளாதார துன்பத்திலிருந்து மீட்டு வாழவைக்க தமிழர்களால்தான் முடியும்!

0
351

மே 1- உலகத் தொழிலாளர் நாள் செய்தி!                 

  01.05.2022

     சிங்கள தேசத்தில் வாழும் ஒட்டு மொத்த மக்களையும் பொருண்மிய துன்பத்திலிருந்து மீட்டு வாழவைக்க தமிழர்களால்தான் முடியும் என்பதே 2022 ஆம் ஆண்டின் தொழிலாளர் நாளில் சிங்கள தேசத்துக்கும், உலகநாடுகளுக்கும் தெரியப்படுத்தும் செய்தியாக அமைகின்றது.
     சிங்கள தேசமான சிறீலங்கா நாட்டின் மூத்த குடிகளான தமிழீழ மக்கள் அந்த நாட்டின் பௌத்த பேரினவாதிகளால் கடந்த 74 ஆண்டுகளாகப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு, அடக்கியொடுக்கப்பட்டு கடந்த 2009 இல் அதியுச்ச தமிழினப்படுகொலையை நடாத்தி ஒன்றரை இலட்சம் பேர் அழிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் கடந்துபோன 13 ஆண்டுகளில் நாம் நின்று கொண்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்து உலகநாடுகளில் வாழும் மக்களும், அவர்களுடன் தாயகத்திலும் தமிழகம் இந்தியாவிலும் வாழும் 15இலட்சம் வரையிலான தமிழீழ மக்களும் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் தமக்கு ஏற்படுத்தப்பட்ட கொடுமைகளுக்கும், உயிர் அழிப்புக்கும் சர்வதேசம் நீதியைப் பெற்றுத்தரவேண்டும் என்ற அரசியல் ரீதியிலான சனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இலங்கை என்னும் சிங்கள சிறீலங்கா தேசத்தில் கடந்த ஏப்பிரல் மாதம் ஏற்பட்ட பெரும் பொருளாதாரப் போராட்டம் இன்று முழுத்தீவையும் கேள்விக்குறிக்கு உள்ளாக்கியுள்ளது. சிங்கள தேசத்தில் ஏற்பட்டிருக்கும் இப்பொருண்மிய நெருக்கடிக்கு காரணமானவர்களாக கடந்துபோன ஆட்சியாளர்களுடன் தற்போது கோலோச்சிவரும் ஈவு இரக்கமற்றவர்களும், புத்தபிரானின் பஞ்சசீலத்தை மறந்த கொடியவர்களான இன்றைய ஆட்சியாளர்கள் கோத்தபாயா, மகிந்த ராஜபக்ச மற்றும் குடும்ப உறுப்பினர்களுமாவர். எரிபொருள்களான பெற்றோல், டிசல், எரிவாயு, மின்சாரம், அத்தியாவசியமான உயிர்காக்கும் மருந்துகள் இல்லை. உணவுத்தட்டுப்பாடு, முழுத்தீவும் தினமும் இரவு பலமணிநேரம் இருளில் முழ்கிக்கொண்டிருக்கின்ற நிலை, வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் இல்லை, குழந்தைகள் குடிக்க பால்மா இல்லை, வாங்குவதற்கு பணமில்லை. ஒரு போர்க்காலச் சூழலைவிட மோசமான நிலையில் சிறீலங்கா தேசத்து மக்கள் உள்ளனர். தலைநகர் முதல் அனைத்து நகரங்களிலும் அனைத்து மக்களும் வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். இத்தனை பொருண்மிய துன்பத்திற்கு இலங்கைத்தீவின் ஆட்சியாளர்கள் ஏன் சென்றனர் என்பதை தமிழர்கள் நாம் அன்றே அறிவோம். ஆனால், இன்றுதான் சிங்களவர்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர். தமிழீழ மக்கள் நாம் இழந்துபோன எமது உரிமையை கேட்டபோது ஆயுதம் கொண்டு அடக்கப்பட்டது. அதிலிருந்து எமது மக்கள் பாதுகாக்கப்பட நாம் ஆயுதம் ஏந்தி 30 வருடங்கள் நேர்த்தியாக பயணப்பட்டிருந்தோம். அதனை ஏற்றுக் கொள்ளாத சிங்கள தேசம் தமிழர்கள் பிரச்சனையை அரசியல் ரீதியில் தீர்க்காது ஆயுத வன்முறையை மேற்கொண்டது. அதற்கான ஆயுதங்களை சர்வதேச நாடுகளிடம் பெரும் விலை கொடுத்து வாங்கியது. அதற்குத் தேவையான பணத்தை சர்வதேச நாடுகளும் தமது பசுபிக், இந்துசமுத்திர சுயநல ஆளுமையை கைப்பற்ற இலங்கை தேசத்திற்கு அள்ளிக் கொடுத்தது. அவ்வாறு வாங்கிய கடனை அடைப்பதற்கு இத்தீவில் 6 தலைமுறையின் தலையில் சுமத்தப்பட்டுள்ளமை ஒரு புறம் இருக்கும் நிலையில், தற்போது ஆயுதப்போராட்டம் இல்லாதநிலையில் அந்தநாட்டையும் ஆட்சியையும் கையகப்படுத்தும் நிலையில் கடன் கொடுத்த நாடுகள் கடனை திருப்பிக் கேட்பதும் பதிலீடாக நிலங்களையும் குட்டித்தீவுகளையும் கேட்டு நிற்பதும். இன்னும் கடனைக்கொடுத்து இலங்கையை கையடக்க நினைக்கும் நாடுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. உள்நாட்டு கிளர்ச்சிப் போராட்டமும் அதில் சிங்கள தீவும், மக்களும் செய்வதறியாது நிர்க்கதியாய் ஆளும் கொடுங்கோன்மையாட்சியாளர் கோத்தபாயாவை வெளியே போ என்று ஒட்டுமொத்தமாக ஒரேகுரல் எழுப்பி வருகின்றனர். இரவு பகலாக நாட்டின் சகலதுறையினரும், மூவின மக்களும் வீதியில் இறங்கிப் போராட்டம் நடாத்துகின்றனர். பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாது போராட்டம் நடாத்தும் சிங்கள மக்கள் 2009 இல் எமது மக்கள் இந்த கொடுங்கோன்மை ஆட்சியாளர்களால் பிஞ்சுப் பாலகர்கள் முதல் பெரியவர்கள் வரை இரக்கமின்றி கொல்லப்பட்டதும், ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என்று சிங்கள அரசிடம் நம்பிக் கையளித்த போராளிகளுக்கு இதுவரை பதில் இல்லாத நிலையில், அந்தக் குடும்பங்களின் கண்ணீருக்கு விடைதெரியாத நிலையில் தான் தமிழர்கள் நாம் நின்று கொண்டிருக்கின்றோம்.
கடந்த 74 ஆண்டுகளுக்கு மேலாகத் தனது குடிமக்களாகக் கருதும் தமிழர்கள் மேல் பாரபட்சம் காட்டிய சிங்கள பௌத்த பேரினவாதம், இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியில் இருந்து தனது சிங்கள மக்களையே காப்பதற்கு வழிதெரியாதவர்களாக நிற்பவர்கள், எவ்வாறு தமிழர்களுக்கு உதவப்போகின்றார்கள் என்பதை இனியாவது சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பொருளாதாரத்துன்பம், ஈழத்தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியவையல்ல 1991 ஆம் ஆண்டு முதல் இதனை அனுபவித்தவர்கள் நாங்கள். ஆனாலும் இத்தீவின் மற்றொரு இனமான சிங்கள மக்கள் படும் துன்பத்தில் நாமும் பங்கெடுக்கலாமேயொழிய இந்த கொடுங்கோன்மையாட்சியாளர்களை அகற்ற வேண்டியது சிங்கள மக்களின் பொறுப்பேயாகும். ஏன் என்றால் அவர்கள்தான் 65 வீதமான வாக்குகளை வழங்கி அரியணையில் அவர்களை ஏற்றி அழகுபார்த்தவர்கள். இந்தநிலையில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா போன்ற பெரும் நாடுகள் தமது மக்களை சிறீலங்காவுக்கு தற்போது செல்லவேண்டாம் என்று தெரிவித்துள்ள நிலையில், இன்று உலகில் ஐரோப்பிய நாட்டில் ஏற்பட்டிருக்கும் உக்கிரேன், ரசியா நாடுகளின் போர் வரும் நாட்களில் எவ்வாறு மாறப்போகின்றது என்று பல ஊகங்களுக்கு மத்தியிலும், அங்கு நடைபெற்ற மக்கள் படுகொலைகளும், அழிவுகளும் எமது 2009 போர் அழிவையே நினைவு படுத்துகின்றன.
       ஆசியக்கண்டத்தில் சிறீலங்கா தேசத்தில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டு நெருக்கடியையும் உலகமும், ஐரோப்பிய நாடுகளும் கவனம் எடுக்க வேண்டும். அதற்றுக்கு குரல் கொடுக்கவும் பெரும் பலமாகவும் இருக்க வேண்டிய தலையாய பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழீழ மக்களில் தான் தங்கியுள்ளது. எமது நியாயப்பாட்டிற்காகவும், நீதிக்காகவும் உரிமைக்குமான போராட்டங்களில் எமது மக்கள் பெருமளவில் பங்கெடுக்க வேண்டும். இலங்கைத்தீவில் ஏற்பட்டிருக்கும் போர்க்காலச்சூழ்நிலை போன்ற பொருளாதார நிலை எதிர்காலத்தில் சிங்களத்துக்கு மட்டுமல்ல ஐரோப்பிய, சர்வதேசநாடுகளுக்கு ஓர் அவலத்தைத் தான் ஏற்படுத்தப்போகின்றது.

தமிழீழ மக்களாகிய நாம் எந்தப் பொருளாதாரத் துன்பத்தையும் சந்திக்கக் கூடியவர்கள், ஆனால், தமிழர்கள் நாம் கேட்பது நிம்மதியாக, சுதந்திரமாக, சந்தோசமாக நாம் வாழவேண்டும். அதற்கான ஒரே தீர்வு இழந்து போன பறிக்கப்பட்ட எமது தாய்நிலத்தை சிங்கள தேசத்திடமிருந்து பிரித்துக் கொடுத்துவிடுங்கள் என்பதே. அவ்வாறு அமைவதால் தான் இனி சிங்கள தேசத்தில் வாழும் ஒட்டு மொத்த மக்களையும் பொருளாதார துன்பத்திலிருந்து மீட்டு வாழவைக்க தமிழர்களால் தான் முடியும் என்பதே 2022 ஆம் ஆண்டின் தொழிலாளர் நாளில் சிங்கள தேசத்துக்கும், உலகநாடுகளுக்கும் தெரியப்படுத்தும் ஒரு செய்தியாக அமைகின்றது.
“ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ’’
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு.

                                   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here