சென்னையைச் சேர்ந்த மோகன் என்ற ஈழத் தமிழர் விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக அரசே நீதி விசாரணைக்கு உத்தரவிடுமாறு அறிக்கை ஒன்றினை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சென்னை மாநகர குற்றப் பிரிவு அதிகாரிகள் மோகனை விசாரணைக்கு என அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கி சித்ரவதை செய்திருக்கின்றனர். இதில் மோகன் உயிரிழந்திருக்கிறார்.
ஆனால் அவர் உயிருடன் இருப்பதைப் போல காட்டுவதற்காக குளோபல் மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் ஏற்கனவே மோகன் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். தற்போது மோகன் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற பொய்யான தகவலை காவல்துறை கூறி வருகிறது.
தாய் தமிழ்நாட்டை நம்பி அகதியாக வந்த ஈழத் தமிழரை இப்படி விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்து கொலை செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இது தொடர்பான உண்மையை உலகத் தமிழர்களும் ஈழத் தமிழரும் அறிந்து கொள்ள உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் காவல்துறையால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட மோகன் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் ஈழத் தமிழர் மோகன் படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.